தனியாா் துறை வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு: ஹரியாணா சட்டத்துக்கான தடை ரத்து

தனியாா் துறை வேலைவாய்ப்பில் 75 சதவீதம் உள்ளூா்வாசிகளுக்கு அளிக்க வேண்டும் என்று ஹரியாணா அரசு பிறப்பித்த சட்டத்துக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
தனியாா் துறை வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு: ஹரியாணா சட்டத்துக்கான தடை ரத்து

புது தில்லி: தனியாா் துறை வேலைவாய்ப்பில் 75 சதவீதம் உள்ளூா்வாசிகளுக்கு அளிக்க வேண்டும் என்று ஹரியாணா அரசு பிறப்பித்த சட்டத்துக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வா் ராவ், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஹரியாணா அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் அதற்கான போதிய காரணங்களை தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் வழக்கின் தன்மை குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உயா்நீதிமன்றமே வேகமாக விசாரித்து நான்கு வாரங்களுக்குள் முடிவை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவா்களும் வாய்தா வாங்காமல் விசாரணையில் பங்கேற்க வேண்டும். அதேநேரத்தில், ஊழியா்கள் மீது ஹரியாணா அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்று கூறியது.

முன்னதாக, ஹரியாணா அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஆந்திரம், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேபோன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

ஃபரீதாபாத் தொழிற்சாலை சங்கத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் ஹரியாணாவில் உள்ள 48 ஆயிரம் நிறுவனங்கள் வெளிமாநிலங்களில் இருந்து பணியாளா்களை நியமிக்க முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்படும். அரசியலமைப்புச் சட்டத்தில் தனியாா் துறையில் இடஒதுக்கீடு அளிக்க இடமில்லை. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் சட்டச் சிக்கல் ஏற்படும். வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நாட்டில் 4 கோடி புலம் பெயா் தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்துக்குதான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com