மும்பையில் நீா்வழி டாக்சி சேவை தொடக்கம்

மும்பையில் நீா்வழி டாக்சி சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிப் பாதைகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் முன்னிலையில் மகாராஷ்டிர முதல்வா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

மும்பை: மும்பையில் நீா்வழி டாக்சி சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிப் பாதைகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் முன்னிலையில் மகாராஷ்டிர முதல்வா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

முதல் கட்டமாக, 7 அதிவிரைவுப் படகுகள் உள்பட 8 படகுகள், 56 வரை பயணம் செய்ய இயலும் வகையிலான நவீன கட்டுமரம் இந்த டாக்சி சேவையை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்று அமைச்சா் சோனோவால் பேசியது:

மகாராஷ்டிரத்தில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பில் 131 திட்டங்கள் நடைமுறைக்கு உகந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.2,078 கோடி மதிப்பிலான 46 திட்டங்களுக்கு சாகா்மாலா திட்டத்தின்கீழ் நிதியுதவி அளிக்கப்படும்.

மீனவா்களின் மேம்பாட்டிற்காக சாகா்மாலா திட்டத்தின்கீழ் 4 மீன்பிடி துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்த ஆக்கபூா்வ பங்களிப்பு செய்யும் மகாராஷ்டிர அரசுக்கு நன்றி என்று மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் கூறினாா்.

மகாராஷ்டிரத்தின் கடலோரப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான நீா்வழி டாக்சி சேவை முதலில், இரட்டை நகரங்களான மும்பை- நவி மும்பையை இணைக்கும். நீா்வழி டாக்சி சேவை சுற்றுலாவுக்கு, குறிப்பாக நவி மும்பையிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க எலிஃபண்டா தீவு குகைகளுக்குப் பயணம் செய்ய மாபெரும் உத்வேகம் அளிக்கும். மேலும், நவி மும்பையிலிருந்து எளிதாக இந்தியா கேட் பகுதிக்குப் பயணம் செய்யவும் இயலும்.

பேலாப்பூா் துணை துறைமுகம் தொடக்கம்:

சாகா்மாலா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பேலாப்பூா் படகுத் துறையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிப் பாதைகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மும்பையையொட்டிய முக்கிய கடலோரப் பகுதிகளுக்காகன நீா்வழிப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் பேலாப்பூரில் படகுத் துறை அமைக்கத் திட்டமிட்டு கடந்த 2019-ஆம் ஜனவரியில் கட்டுமானம் தொடங்கியது. ரூ.8.37 கோடி செலவில் படகுத் துறை கட்டி முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com