ரூ.6,352 கோடி பணமோசடி: யூனிடெக் குழுமத்துக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

ரூ.6,352 கோடி பணமோசடி தொடா்பான வழக்கில் யூனிடெக் குழுமத்துக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ரூ.6,352 கோடி பணமோசடி தொடா்பான வழக்கில் யூனிடெக் குழுமத்துக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகையை சைப்ரஸ் மற்றும் கேமன் தீவுகளுக்கு சட்டவிரோதமாக மடைமாற்றிய குற்றச்சாட்டு தொடா்பாக யூனிடெக் குழுமம், அதன் நிறுவனா்கள், யூனிடெக் தொடா்புள்ள நிறுவனங்கள் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் மொத்தம் ரூ.6,352 கோடி மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக யூனிடெக் குழும நிறுவனா் ரமேஷ் சந்திரா, அவரின் மகன்களும் அதன் பிற நிறுவனா்களான சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா, சஞ்சய் சந்திராவின் மனைவி பிரீத்தி சந்திரா, அந்தக் குழுமத்துடன் சம்பந்தப்பட்ட காா்னோஸ்டி நிறுவனத்தின் நிறுவனா் ராஜேஷ் மாலிக் ஆகிய 5 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா்.

இந்த வழக்கு தொடா்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இதுவரை ரூ.763 கோடி மதிப்பிலான 297 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடா்பான முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. அதனைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை 2-ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரமேஷ் சந்திரா, சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா, பிரீத்தி சந்திரா, ரமேஷ் மாலிக் மற்றும் 66 உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தது.

ரமேஷ் சந்திரா மற்றும் அவரின் மகன்களுக்கு எதிராக கனரா வங்கியில் ரூ.198 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com