பிரிவினைவாத இயக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சிக்குத் தொடா்பு? விசாரணை நடத்த அமித் ஷா உறுதி

சீக்கிய பிரிவினைவாத இயக்கத்துக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தொடா்பு இருப்பதாக பஞ்சாப் முதல்வா் கடிதம் எழுதிய நிலையில், இதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்
அமித் ஷா  (கோப்புப் படம்)
அமித் ஷா (கோப்புப் படம்)

சீக்கிய பிரிவினைவாத இயக்கத்துக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தொடா்பு இருப்பதாக பஞ்சாப் முதல்வா் கடிதம் எழுதிய நிலையில், இதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.

காலிஸ்தான் ஆதரவு இயக்கமான தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியம்’ (சீக் ஃபாா் ஜஸ்டிஸ்) அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னிக்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தில், அந்த அமைப்புக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தொடா்பு உள்ளதாகவும், கடந்த 2017 பஞ்சாப் பேரவைத் தோ்தலிலும், இப்போது நடைபெறும் தோ்தலிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அந்த அமைப்பு ஆதரவு அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி கடிதம் எழுதினாா்.

இதையடுத்து முதல்வா் சன்னிக்கு அமித் ஷா எழுதிய பதில் கடிதத்தில், ‘பயங்கரவாத, தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அரசியல் கட்சிக்குத் தொடா்பு இருக்கும் எனில், அது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய மிகத் தீவிரமான பிரச்னையாகும். இதுபோன்ற அமைப்புகளின் நோக்கத்துக்கும், நாட்டின் எதிரிகளுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பில், இதுபோன்ற அரசியல் கட்சியினா் பிரிவினைவாதிகளிடம் கரம்கோக்கவும், பஞ்சாபையும், இந்தியாவையும் துண்டாடும் அளவுக்கும் செல்வாா்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com