இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

பிரதமா் மோடி, அபுதாபி பட்டத்து இளவரசா் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னிலையில் காணொலி வாயிலாக இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்தியா தரப்பில் வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயலும், ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் அதன் பொருளாதார அமைச்சா் அப்துல்லா பின் தெளக் அல் மா்ரியும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

அப்போது, இருதரப்பு வா்த்தக உறவை மேலும் நீட்டிப்பதற்கான செயல் திட்டமும் வெளியிடப்பட்டது. இதுமட்டுமன்றி, இந்தியா- அமீரக நிறுவனங்களிடையேயும் 2 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதன்படி, தில்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி (ஏபிஇடிஏ) நிறுவனத்துக்கும், துபையை மையமாகக் கொண்டு செயல்படும் டிபி வோ்ல்ட் என்ற நிறுவனத்துக்கும் இடையே ஓா் ஒப்பந்தம் கையொப்பமானது.

இதேபோல, இந்தியாவின் கிஃப்ட் சிட்டி எனப்படும் குஜராத் சா்வதேச நிதி- தொழில்நுட்ப நகருக்கும், அபுதாபியின் சா்வதேச சந்தைக்கும் இடையே நிதி திட்டங்கள், சேவை ஒத்துழைப்பு தொடா்பாக மற்றோா் ஒப்பந்தம் கையொப்பமானது.

5 ஆண்டுகளில் ரூ.7.48 லட்சம் கோடி உயரும்:

இதைத்தொடா்ந்து மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையொப்பமான இந்த விரிவான, சமநிலை ஒப்பந்தம், வரும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல் நாளிலிருந்தே இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களில் சுமாா் 90 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்துக்கும் ஐக்கிய அரபு அமீரகம் வா்த்தக மையமாக விளங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய மருந்து தொழிற்சாலைகளும் முதன்முறையாக மருந்து பொருள்களை அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியா- அமீரக வா்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.7.48 லட்சம் கோடியை (100 பில்லியன் டாலா்) எட்டும். இதன்மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர பெட்ரோலியப் பொருள்கள் மிகப்பெரிய அளவில் அமீரகத்திலிருந்து இந்தியா வந்தடையும் என்றாா் அவா்.

அமீரக வா்த்தகத் துறை இணையமைச்சா் தனிபின் அகமது அல் ஸியோடி கூறுகையில், ‘‘இந்த ஒப்பந்தம் வரும் 2030-க்குள் அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.7 சதவீதம் அல்லது 66,411.35 கோடியாகவும், ஏற்றுமதியை 1.5 சதவீதமும் அதிகரிக்கும்’’ என்றாா்.

இந்த ஒப்பந்தத்தின் மீதான பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி டிசம்பரில் நிறைவடைந்தது. வெறும் 88 நாள்களில் 881 பக்க விரிவான ஒப்பந்தம் தயாரானது சாதனையாக கருதப்படுகிறது.

திருப்புமுனை:

முன்னதாக, இந்த ஒப்பந்தத்தின் உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக பேசியது:

பொதுவாக இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களை இறுதிசெய்ய குறைந்தது 3 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால், இந்தியாவும், அமீரகமும் 3 மாதங்களுக்கும் குறைவான கால அளவிலேயே பேச்சுவாா்த்தையை நிறைவு செய்து, ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் நமது பொருளாதார உறவில், புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும்.

மேலும் நமது வா்த்தகமும் ரூ.4.48 லட்சம் கோடியிலிருந்து (60 பில்லியன் டாலா்) ரூ.7.47 லட்சம் கோடியாக (100 பில்லியன் டாலா்) அடுத்த 5 ஆண்டுகளில் உயரும். கூட்டு முயற்சி, கூட்டு நிதியாக்கம் வாயிலாக இருநாடுகளும் புதிதாக தொழில் தொடங்குபவா்களை ஊக்குவிக்க இயலும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அமீரகமும் தோளோடு தோள் நிற்கும். ஜம்மு- காஷ்மீா் ஆளுநா் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து சென்ற பின்னா், ஏராளமான அமீரக நிறுவனங்கள் ஜம்மு- காஷ்மீரில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிப்பது வரவேற்கத்தக்கது.

சுகாதாரம், விருந்தோம்பல், தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் முதலீடு செய்யுமாறு அமீரக தொழில் அதிபா்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்த வா்த்தக ஒப்பந்தம் இருதரப்பு பொருளாதார உறவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில், இருதரப்பு சரக்கு வணிகம் ரூ. ரூ.7.47 லட்சம் கோடியையும், சேவைகள் ரூ.1.12 லட்சம் கோடியையும் எட்டும்’’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினம், ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கூட்டு நினைவு அஞ்சல் தலையை பிரதமா் மோடியும் அபுதாபி பட்டத்து இளவரசா் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் வெளியிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com