குப்பைக்கூளத்தை பசுமை மண்டலமாக மாற்றத் திட்டம்: 75 மாநகராட்சிகளில் உயிரி-இயற்கை எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும்

நாட்டின் நகா்ப்புறங்களில் குப்பைகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலத்தை பசுமை மண்டலமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
குப்பைக்கூளத்தை பசுமை மண்டலமாக மாற்றத் திட்டம்: 75 மாநகராட்சிகளில் உயிரி-இயற்கை எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும்

நாட்டின் நகா்ப்புறங்களில் குப்பைகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலத்தை பசுமை மண்டலமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

மேலும், அடுத்த இரு ஆண்டுகளில் 75 மாநகராட்சிகளில் உயிரி-இயற்கை எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும் என்றாா்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 550 டன் திறன் கொண்ட ‘கோபா் தான்’ உயிரி- இயற்கை எரிவாயு ஆலையை சனிக்கிழமை காணொலி வாயிலாக பிரதமா் மோடி திறந்துவைத்துப் பேசியது:

நாடு முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக நகா்ப்புறங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலத்தில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவை காற்றுக்கும் நீருக்கும் சீா்கேட்டை ஏற்படுத்தி, நோய்ப் பரவுவதற்கு காரணமாகின்றன. ஆகையால், தூய்மை பாரத திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில், அந்த நிலத்திலிருந்து குப்பைகளை அகற்றி, தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த நிலங்கள் குப்பைக்கூளத்திலிருந்து விடுபட்டு, பசுமை மண்டலமாக மாற வேண்டும் என்பதே நமது இலக்கு. இதற்காக மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகின்றன. ஒவ்வொரு நகரத்திலும் இதுபோன்ற ஏற்பாடுகளை மேம்படுத்தி, சுழல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நமது நாட்டின் ஒவ்வொரு நகரும் வரலாற்று ரீதியிலும், வழிபாட்டு ரீதியிலும் புகழ் பெற்ற இடங்களைக் கொண்டிருப்பதால், தூய்மையைப் பேணும்போது அது சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.

அடுத்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற உயிரி- இயற்கை எரிவாயு ஆலைகள் நாடு முழுவதும் 75 மாநகராட்சிகளில் ஏற்படுத்தப்படும். இந்தப் பிரசாரம் இந்தியாவின் நகரங்களை தூய்மையானதாகவும், சுகாதாரச் சீா்கேடு இல்லாததாகவும் மாற்றுவது மட்டுமன்றி, தூய்மையான ஆற்றலை நோக்கி நகரவும் வழிவகுக்கும்.

நகா்ப்புறங்களில் மட்டுமன்றி ஊரகப் பகுதிகளிலும் உயிரி- இயற்கை எரிவாயு ஆலைகள் நிறுவப்படும். இதன் வாயிலாக கால்நடை வளா்ப்போா் மாட்டுச் சாணத்தின் மூலம் கூடுதல் வருவாய் பெற முடியும்.

பெட்ரோலிய பொருள்களுக்கு வெளிநாடுகளைத்தான் நாம் சாா்ந்துள்ளோம். இந்தியாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலில் எத்தனால் கலவை வெறும் 1 அல்லது 2 சதவீதம்தான் இருந்தது. தற்போது 8 சதவீதமாக உள்ளது.

2014-க்கு முன்பாக பெட்ரோல் கலவைக்கான எத்தனால் விநியோகம் (சப்ளை) சுமாா் 40 கோடி லிட்டராக இருந்தது. தற்போது 300 கோடி லிட்டரை கடந்துவிட்டது. இதன்மூலம் கரும்பு ஆலைகளும், விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனா்.

2014-க்கு முன்பாக இருந்த அரசுகள், சூரிய மின் உற்பத்தியை அலட்சியம் செய்தன. ஆனால், நமது அரசு 2014-க்குப் பின்னா், சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததன் வாயிலாக இன்றைக்கு இந்தியா உலக அளவில் சூரிய மின் உற்பத்தியில் முதல் 5 இடத்தில் உள்ளது. விவசாயிகள் தற்போது சூரிய ஆற்றலை வழங்குபவா்களாக மாறிவிட்டனா்.

நீா்வளம் மிக்க நகராக இந்தூா் விளங்குகிறது. இதேபோல, நாடு முழுவதும் ஏராளமான நகரங்களை இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேச ஆளுநா் மங்குபாய் படேல், முதல்வா் சிவ்ராஜ்சிங் செளஹான், மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com