ரஷியா-உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ரஷியா - உக்ரைன் இடையிலான பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தைகள் மூலம் தீா்வு காணப்பட வேண்டும்;
ரஷியா-உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ரஷியா - உக்ரைன் இடையிலான பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தைகள் மூலம் தீா்வு காணப்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

உத்தர பிரதேச மாநிலம், பலியாவில் தோ்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ரஷிய அதிபருடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபா் தெரிவித்துள்ள தகவல் இந்தியாவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அமெரிக்க அதிபா் தனது தரப்பிலிருந்து சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளாா். இந்த விவகாரத்தில் எந்த வழியிலாவது அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றுதான் இந்தியா விரும்புகிறது. பேச்சுவாா்த்தைகள் நடைபெறும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியலாம். அமைதியான உலகையே இந்தியா எப்போதும் விரும்புகிறது. அமைதியின் பக்கமே இந்தியா நிற்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைனை அனுமதிக்கக் கூடாது; முன்னாள் சோவியத் நாடுகளில் இருந்து நேட்டோ படைகளைக் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ரஷியா, உக்ரைன் எல்லையில் தனது படைகளைக் குவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரு பிராந்தியங்களை சுதந்திரமான பகுதிகள் என்று ரஷியா திங்கள்கிழமை அறிவித்து அங்கீகாரம் வழங்கியது. இந்த நடவடிக்கையால், இருதரப்பிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு நாடுகளும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும், தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தைகள் மூலம் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com