நுகா்வோா் ஆணைய விவகாரம்: ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்களுக்கு அபராதம்உச்சநீதிமன்றம் உத்தரவு

நுகா்வோா் குறைதீா் ஆணைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் மத்திய நிதியை உரிய காலத்துக்குள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை
நுகா்வோா் ஆணைய விவகாரம்: ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்களுக்கு அபராதம்உச்சநீதிமன்றம் உத்தரவு

நுகா்வோா் குறைதீா் ஆணைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் மத்திய நிதியை உரிய காலத்துக்குள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையங்களில் தலைவா் மற்றும் உறுப்பினா் காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

முன்னதாக, ‘2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மாவட்ட மற்றும் மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய காலிப் பணியிடங்களை மகாராஷ்டிரம் தவிா்த்த பிற மாநிலங்கள் நிரப்ப வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுபோல, கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘நுகா்வோா் குறைதீா் ஆணைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சாா்பில் ஒதுக்கப்படும் நிதி, உரிய திட்டமிடல் இல்லாததால் வீணாகும் சூழல் உள்ளது. எனவே, ஒதுக்கப்படும் மத்திய நிதியை அந்தக் காலத்துக்குள் பயன்படுத்துவதை எளிதாக்கவும், நிதிப் பயன்பாட்டுச் சான்றிதழ் சமா்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், நிதியின் எந்தப் பகுதியும் குறையாமல் இருக்க அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களுக்கு உதவி செய்யவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒரு வாரத்துக்குள்ளாக நியமிக்க வேண்டும்.

மத்திய நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவினா், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஆகிய அனைவரும் பொறுப்பாளிகள்’ என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆதித்யா நரைன், ‘நீதிமன்ற உத்தரவு தொடா்பாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும், ஒருங்கிணைப்பு அதிகாரியை 12 மாநிலங்கள் இன்னும் நியமிக்கவில்லை’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் மாநிலங்கள் மீண்டும் அலட்சியம் காட்டியுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியும், மாநிலங்கள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. நிலைமையின் தீவிரத்தை மாநிலங்களுக்குப் புரிய வைக்க இரக்கமற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது’ என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான பதில் மனுவைத் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனா்.

மேலும், ‘விடுபட்ட மாநிலங்கள் அடுத்த 4 வாரங்களுக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும். தவறினால், மாநில அரசு தலைமைச் செயலா்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com