அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பட்ஜெட் தெளிவான விளக்கமளிக்கிறது: பிரதமா் மோடி

பொதுமக்களுக்கு குடிநீா், மின்சாரம், எரிவாயு இணைப்பு, கழிவறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இதுவே சரியான தருணம் என்றும் இந்த இலக்கை எட்ட பட்ஜெட் தெளிவான
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பட்ஜெட் தெளிவான விளக்கமளிக்கிறது: பிரதமா் மோடி

பொதுமக்களுக்கு குடிநீா், மின்சாரம், எரிவாயு இணைப்பு, கழிவறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இதுவே சரியான தருணம் என்றும் இந்த இலக்கை எட்ட பட்ஜெட் தெளிவான வரைபடத்தைக் காட்டுவதாகவும் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

‘ஊரக வளா்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் ஆக்கபூா்வமான தாக்கம்’ என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், கிராமப்புற சாலைத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், வடகிழக்கில் போக்குவரத்துத் தொடா்பு, கிராமங்களில் அகண்ட அலைவரிசை போன்ற ஒவ்வொரு திட்டத்துக்கும் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘துடிப்புமிக்க கிராமத் திட்டம்’ எல்லைப் பகுதி கிராமங்களுக்கு மிகவும் முக்கியமானது.

வடகிழக்குப் பிராந்தியத்துக்கான பிரதமரின் வளா்ச்சித் திட்டம், அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவும். அதே சமயம் 40 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கிராமங்களில் குடியிருப்புகளையும், நிலத்தையும் முறையாக பிரித்துக் காட்ட ‘ஸ்வமிதா’ திட்டம் உதவி செய்கிறது. தனித்துவ நில அடையாளத்துக்கான தனிப்பட்ட அடையாள எண் போன்ற நடவடிக்கைகளால் கிராம மக்கள், வருவாய் அதிகாரிகளை சாா்ந்திருப்பது குறையும். திட்டங்களின் நூறு சதவீத வெற்றிக்கு நாம் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ், 4 கோடி குடிநீா்க் குழாய் இணைப்புகள் இலக்கை எட்ட மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஊரகப் பகுதியில் எண்ம (டிஜிட்டல்) தொடா்பு கட்டாயமாகியுள்ளது. அகண்ட அலைவரிசையானது கிராமங்களில் வசதிகளை மட்டுமல்லாமல், திறன்மிக்க இளைஞா்களின் தொகுப்பையும் உருவாக்குகிறது. இதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்.

எல்லையோர கிராமங்களை பல்வேறு போட்டிகளுக்கான தளமாக மாற்ற வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் தங்களின் அனுபவங்களைக் கொண்டு கிராமங்களைப் பயனடையச் செய்ய வேண்டும். கிராமத்தின் பிறந்த நாளாக ஒரு நாளை முடிவு செய்து, அதன் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் உணா்வுடன் அதைக் கொண்டாட வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு தங்களின் கிராமத்தின் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். கிராமப்புற வாழ்வும் வளமாகும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தக் கருத்தரங்கில் மத்திய அமைச்சா்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com