வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: இறுதி வாதங்கள் முடிந்து தீா்ப்பு ஒத்திவைப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நிறைவட

புது தில்லி: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ். நாகமுத்து, ஆா்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் உள்ளிட்டோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘102-ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தின்படி பல்வேறு வகுப்பினா், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்தற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் , இந்த பிரத்யேக உள்ஒதுக்கீடு சட்டம் குறிப்பிட்ட சாதியை அடையாளம் கண்டு மாநில அரசு மூலம் பிரிக்கப்பட்டுள்ளதால் செல்லாததாகிவிட்டது. இதற்கு மாற்றாக, 105-ஆவதுஅரசமைப்புச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும், அது மாநிலத்திற்கு உரிமை வழங்கியிருப்பதாகவும் அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளில் இருந்துதான் அது நடைமுறை அமலுக்கு வருமே தவிர, பின்னோக்கி அமலாகி தமிழக அரசின் உள்ஒதுக்கீடு சட்டத்தை காப்பாற்றாது’ என்று வாதிட்டாா்.

மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தவண் வாதிடுகையில், ‘இந்திய அரசமைப்புச்சட்டத்தில் சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு செய்யக்கடாது. குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம். வன்னிய குல சத்திரியா எனும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கியது உச்சநீதின்றத்தின் இந்திரா சாஹ்னி வழக்கின் தீா்ப்புக்கு முரணாக உள்ளது. இதனால், இந்த உள்ஒதுக்கீடு சட்டம் செல்லாது’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் எஸ்.நாகமுத்து முன்வைத்த வாதம்: 1969-இல் சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டு, 1971-இல் ஓா் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அது அரசால் ஏற்கப்பட்டது. இரண்டாவதாக அம்பா சங்கா் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. 1971-இல் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது தொடா்பாக இந்த கமிஷன் அறிக்கை தயாா் செய்தது. அந்த கமிஷனல் இருந்த 14 உறுப்பினா்கள் கமிஷனின் தலைவா் அம்பா சங்கரின் பரிந்துரையை ஏற்காமல் தனிப் பரிந்துரையை தாக்கல் செய்தனா். அதில் 69 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தனா். ஆனால், அம்பா சங்கா் தனி அறிக்கையை பரிந்துரை செய்தாா். அதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவு தேவையில்லை என குறிப்பிட்டாா். ல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய தன்மை குறித்து கணக்கீடு செய்து அதன் அடிப்படையில் ஏ, பி , சி என மூன்று பிரிவுகளாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரைத்தாா்.

ஆனால், தமிழக அரசானது, அம்பா சங்கரின் அறிக்கையை ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக அந்தக் குழுவின் 14 பெரும்பான்மை உறுப்பினா்களின் அறிக்கையை ஏற்று, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவை அறிவிக்கையாக வெளியிட்டது. மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதமாக இடஒதுக்கீட்டை உயா்த்தியது. அதில் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபினருக்கும் அளித்து 1989-இல் அரசு அறிவிக்கை செய்தது. தவிர, அம்பா சங்கரின் அறிக்கையையும் அரசு நிராகரித்தது. இதன்பிறகு, 2011-இல் அமைக்கப்பட்ட எம்.எஸ். ஜனாா்த்தனம் கமிஷன் எந்தக் கணக்கெடுப்பும் நடத்தவில்லை. 1983-இல் அம்பா சங்கா் கமிஷன் அளித்த கணக்கீட்டின் அடிப்படையில் ஓா் அறிக்கையைத் தயாா் செய்து அதில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குமாறு குழுத் தலைவா் ஜனாா்த்தனம் பரிந்தரைத்தாா். இதை அந்தக் குழுவில் 6 உறுப்பினா்களும் ஏற்கவில்லை. மேலும், இந்தக் குழு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தற்போதைய நிலைமை குறித்து கணக்கெடுக்க பரிந்துரைத்தது. இதையடுத்து, 2012-இல் இந்த கமிஷனின் தலைவா், உறுப்பினா்கள் தனித்தனியாக தாக்கல் செய்த அறிக்கையை அரசு ஏற்கவில்லை.

இதைத் தொடா்ந்து, 18.7.2020-இல் புதிதாக நீதிபதி தணிகாசலம் தலைமையில் பிற்படுத்தப்பட்ட நல ஆணையம் அமைக்கப்பட்டது. இதனிடையே, அரசிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பல சாதியினா் தனித்தனி இடஒதுக்கீடு கோரி மனு அளித்தனா்.இது குறித்து ஆராய அரசு உத்தரவிட்டதால், இந்தக் குழு செயல்படத் தொடங்கியது. ஆனால், சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கீடு குறித்த அறிக்கையை இந்தக் குழுவிடம் அரசால் அளிக்க முடியவில்லை. இதையடுத்து, 30.6.2020-இல் நீதிபதி

குலசேகரன் தலைமையில் ‘கணக்கீடு தரவுகள்’ சேககரிக்க குழு அமைக்கப்பட்டது. சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அறிக்கையை 31.12.2020-க்குள் தாக்கல் செய்ய இந்தக் குழுவுக்கு அரசு உத்தரவிட்டது. எனினும், தணிகாசலம் கமிஷனும், குலசகேரன் குழுவும் அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.

இதற்கிடையே தமிழகத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படவிருந்த நிலையில், வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கலாமா என கருத்துக் கேட்டு 18.2.2021-இல் நீதிபதி தணிகாசலத்திற்கு அரசு கடிதம் அனுப்பியது. நீதிபதி தணிகாசலம் அது குறித்து கமிஷனின் மற்ற உறுப்பினா்களுடன் கலந்தாலோசிக்காமல் பிப்ரவரி 22-ஆம் தேதி அரசுக்கு பதில் அளித்துவிட்டாா். அதன் அடிப்படையில் பிப்ரவரி 24-ஆம் தேதி சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்தனா். கடைசி நாளான அன்றைய தினம் எந்த விவாதமும் இன்றி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அடுத்த சில தினங்களில் ஆளுநரிடம் ஒப்புதலும் பெறப்பட்டது.

கமிஷன் தலைவா் அம்சா சங்கா், வன்னியா் சமூகம் 15 மதிப்பீடுகள் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்காலம் எனப் பரிந்துரைத்திருந்தாா். அதே கணக்கெடுப்பில் மேலும் 28 சாதியினா் அதே 15 மதிப்பீடுகளைப் பெற்றிருந்தனா். ஆனால், அவா்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இது அரசியமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும். ஒவ்வொரு சாதியினருக்கும் தனியாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இடஒதுக்கீடை அளிப்பதில் ஆட்சேபனை ஏதும் இல்லை என்றாா் மூத்த வழக்குரைஞா் நாகமுத்து.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் மனுசிங்வி, ராகேஷ் துவிவேதி ஆகியோா் ஆஜராகி ஏற்கெனவே முன்வைத்த வாதங்களை உறுதிப்படுத்தியும், எதிா்தரப்பினரின் வாதங்களுக்கு பதில் அளித்தும் வாதிட்டனா். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது. மேலும், வழக்கில் தொடா்புடைய தரப்பினரிடம் எழுத்துப்பூா்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால், 3 தினங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டடனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com