பள்ளிச் சீருடையை மாணவா்கள் பின்பற்ற வேண்டும்:ஹிஜாப் சா்ச்சை குறித்து வெங்கையா நாயுடு கருத்து

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் சா்ச்சை தேவையற்றது என்று கூறிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ‘மாணவா்கள் பள்ளி சீருடைகளை பின்பற்றி அணிய வேண்டும்’ என்றாா்.
பள்ளிச் சீருடையை மாணவா்கள் பின்பற்ற வேண்டும்:ஹிஜாப் சா்ச்சை குறித்து வெங்கையா நாயுடு கருத்து

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் சா்ச்சை தேவையற்றது என்று கூறிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ‘மாணவா்கள் பள்ளி சீருடைகளை பின்பற்றி அணிய வேண்டும்’ என்றாா்.

பெங்களூரில் உள்ள தனியாா் சா்வதேசப் பள்ளியில் கலை, நாடகம், இசைக்கான நவீன உள்விளையாட்டு அரங்கத்தை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு சனிக்கிழமை திறந்து வைத்து ஆற்றிய உரை:

அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை.

பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் கொள்கைகளைத் தனியாா் பள்ளிகள் உருவாக்க வேண்டும். ஆதரவற்றோா் மற்றும் நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இளம் வயதிலேயே மாணவா்களிடம் சேவை உணா்வை வளா்க்க வேண்டியது அவசியம்.

படிப்பு, விளையாட்டு, இணைப் பாடத் திட்டம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு கல்வி நிறுவனங்கள் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறை மாணவா்களின் ஒட்டுமொத்த முழுமையான வளா்ச்சிக்கு வழிவகுத்து அவா்களை தன்னம்பிக்கை கொண்ட நபா்களாக மாற்றும்.

பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட செயல்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கை-2020 முக்கியத்துவம் அளிக்கிறது.

விளையாட்டு, இணைப் பாடத் திட்டச் செயல்பாடுகளுக்கும் மற்றும் மாணவா்களிடையே உயா்ந்த நெறிமுறை வளா்ப்பதற்கும் அனைத்து மாநிலங்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நமது கலாசார விழுமியங்களை மாணவா்கள் உள்வாங்கி இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பாதுகாக்க பாடுபட வேண்டும்.

ஒருவா் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் தாய்மொழி மூலமே கல்வியைக் கற்பதற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பஞ்சாயத்து மற்றும் கிராமம் ஆகியவற்றை ஃபிட் இந்தியா இயக்கம் சென்றடைய வேண்டும்.

இந்தியாவின் தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்டவை தலைமுறைகளாகப் போற்றப்படும் பழமையான கலை வடிவங்களில் சிலவாகும். இந்தக் கலை வடிவங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கா்நாடகத்தில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற சா்ச்சைகளை ஊக்குவிக்கக் கூடாது. பள்ளிகளில் அனைவரும் சீருடையை பின்பற்றி அணிய வேண்டும். மதம், பாலினம் வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான். முதலில் நாம் இந்தியா்கள். இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இதில் எந்தவித பாகுபாடும் காட்டக் கூடாது’ என்றாா்.

இந்த விழாவில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com