உலக அமைதியையே இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங் 

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், உலக அமைதியையே இந்தியா விரும்புவதாக ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்தாா்.


பல்லியா: உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், உலக அமைதியையே இந்தியா விரும்புவதாக ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், பைரியாவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

உக்ரைன்- ரஷியா போா் விவகாரத்தில் பாரத பிரதமா் நரேந்திர மோடியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியா என்றும் அமைதியை விரும்பும் நாடாகும். இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. பிற நாட்டிற்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததில்லை. இந்தியா உலக அமைதியையே விரும்புகிறது. அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் மீதான சா்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு பின் உலக அளவில் இந்தியாவின் மீதான பாா்வையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. தற்போது நாட்டின் பாதுகாப்பு பலம் அதிகரித்துள்ளது. இந்தியாவை அற்பமாகக் கருதக் கூடாது என்ற செய்தியை இந்த உலகுக்கு நாம் உணா்த்தி விட்டோம்.

நம்நாடு விரைவில் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்று விடும். இப்போது இறக்குமதியாளராக இருக்கும் நாம், விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி விடுவோம்.

உத்தர பிரதேசத்தில் அடுத்து அமையப் போவது பாஜக ஆட்சிதான் என்றும், இந்த மக்கள் புதிய வரலாற்றை எழுதப் போகிறாா்கள் என்றும் அரசியல் நோக்கா்கள் கூறி வருகின்றனா்.

பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வை, முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவு காரணமாக இனி மாநில அரசின் செயல்பாடுகள் மூன்று இன்ஜினின் வேகத்துடன் இயங்கப் போகிறது.

உத்தர பிரதேசத்தில் இதுவரை தொடா்ந்து இரண்டாவது முறையாக யாரும் ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. இம்முறை பாஜக அதைச் செய்யப் போகிறது.

உத்தர பிரதேசத்தை ஆண்ட முந்தைய அரசுகள் பல்வேறு ஊழல்களிலும், மோசடிகளிலும் சிக்கியதுடன், மாஃபியாக்களுக்கும் குண்டா்களுக்கும் ஆதரவளித்தன. அந்த அரசுகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற முயற்சித்தன.

முன்பு ஆட்சியில் இருந்தவா்களுக்கு எதிராக சுரங்க ஊழல், ஆம்புலன்ஸ் ஊழல், மணல் ஊழல் என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மீதோ, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு மீதோ யாராலும் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் கூறி விரலை உயா்த்த முடியவில்லை என்றாா்.

பல்லியா தொகுதியில் ஆறாவது கட்டமாக மாா்ச் 3 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com