முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து மாநில தேர்தல்; தேதியை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்

கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஐந்து மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 3:30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில், நான்கில் பாஜகவும் ஒன்றில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்துவருகிறது. பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநில தேர்தல்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுவருகின்றன. நேரடியாக ஆட்சி செய்துவரும் மூன்று மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப்பை தக்கவைக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

அதேபோல, பாஜகவை பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் அக்கட்சிக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி பெரும் சவாலாக மாறியிருப்பது பாஜகவுக்கு நெருக்கடி அளித்துவருகிறது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல், வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதேபோல், 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. 

கோவாவை பொறுத்தவரை, ஆட்சிக்கு எதிரான மனநிலையை பாஜக எதிர்கொண்டுவருகிறது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியை தவிர்த்து ஆம் ஆத்மி, திரிணமூல் ஆகிய கட்சிகள் கடும் போட்டி அளித்துவருகிறது. 

உத்தரகண்ட் மாநிலத்தில், காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில், கடந்தாண்டு ஆறு மாத காலத்தில் இரண்டு முதல்வர்களை பாஜக மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், கோவாவை போலவே, மணிப்பூரிலும் பெரும்பான்மை தொகுதிகளை காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியது. ஆனால், சிறு சிறு கட்சிகள் அளித்தது, எம்எல்ஏ கட்சி மாறியது ஆகியவை பாஜக ஆட்சி அமைக்க உதவியாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com