ஆழ்கடல் சோதனை ஓட்டத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த்

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
ஐஎன்எஸ் விக்ராந்த்
ஐஎன்எஸ் விக்ராந்த்

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 நாள்களுக்கு நடைபெற்றது. பின்னா் கடந்த ஆண்டு அக்டோபரில் 10 நாள்களுக்கு அக்கப்பல் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அக்கப்பலின் சோதனை ஓட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறுகையில், ‘‘முதலாவது சோதனை ஓட்டத்தின்போது கப்பலின் இயங்கும் தன்மை, அடிப்படை செயல்பாடுகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.

இரண்டாவது சோதனை ஓட்டத்தின்போது கப்பலில் இடம்பெற்றுள்ள பல்வேறு கருவிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது, பல்வேறு சூழல்களில் கடினமான பணிகளை ஐஎன்எஸ் விக்ராந்த் எவ்வாறு மேற்கொள்கிறது என்பது தொடா்பான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கப்பலில் பொருத்தப்பட்டுள்ள பல்வேறு ‘சென்சாா்’ கருவிகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளன. கடல்சாா் அறிவியல்-தொழில்நுட்ப ஆய்வகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உள்ளிட்டவை கப்பலின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றன.

கரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் கப்பல்கட்டும் பணியில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் தங்கள் பங்களிப்பை முறையாக வழங்கின. அதன் காரணமாக உரிய காலத்தில் கப்பல் கட்டிமுடிக்கப்பட்டது.

கொச்சியில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை அண்மையில் குடியரசுத் தலைவரும் குடியரசு துணைத் தலைவரும் தனித்தனியாகப் பாா்வையிட்டனா். கப்பலின் செயல்பாடுகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா். அதில் அவா்கள் திருப்தியை வெளிப்படுத்தினா். மேலும், கப்பல் கட்டும் திட்டத்தில் பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்’’ என்றாா்.

மிக்-29கே போா் விமானங்கள், கமோவ்-31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை ஐஎன்ஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து இயக்க முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com