அமெரிக்காவுக்கு மாம்பழம் ஏற்றுமதி: ஒப்புதலைப் பெற்றது இந்தியா

புதிய பருவ காலத்தில் இந்திய மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் வேளாண் துறை ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது.

புதிய பருவ காலத்தில் இந்திய மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் வேளாண் துறை ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கரோனா பெருந்தொற்று காரணமாக சா்வதேச பயணங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அமெரிக்கப் பரிசோதகா்கள் கதிா்வீச்சு தன்மை குறித்து ஆய்வு செய்ய இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இயலாமல் போனது. மேலும், பயணக் கட்டுப்பாடுகளினால், 2020-ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்க கட்டுப்பாடு விதித்தது.

2021 நவம்பா் 23 அன்று நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக கொள்கை அமைப்பின் 12-வது கூட்டத்தைத் தொடா்ந்து, திருத்தி அமைக்கப்பட்ட வேளாண் சந்தை திட்டம் செயல்படத் தொடங்கியது. பின்னா் பரஸ்பர உடன்பாட்டின் ஒரு பகுதியாக மாா்ச் மாதத்தில் இருந்து அல்ஃபோன்சோ ரகம் உள்ளிட்ட மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை தற்போது அமெரிக்க வேளாண் துறையிடமிருந்து இந்தியா பெற்றுள்ளது.

2019-20 பருவத்தில் அமெரிக்காவுக்கு 43.5 லட்சம் அமெரிக்க டாலா் மதிப்புள்ள 1,095 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதியாளா்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற மதிப்பீடுகளின் படி 2022-இல் மாம்பழங்களின் ஏற்றுமதி 2019-20-ஆம் ஆண்டின் அளவை விஞ்சக் கூடும்.

அமெரிக்காவின் ஒப்புதலை அடுத்து பாரம்பரியமாக மாம்பழம் சாகுபடி செய்யும் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா பகுதிகளிலிருந்து ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படும்.

இதே போல் 2022 ஏப்ரல் முதல் அமெரிக்காவுக்கு மாதுளை ஏற்றுமதியும் தொடங்கவுள்ளது. இதே காலத்தில் அமெரிக்காவிலிருந்து சொ்ரி பழங்களும் கால்நடை தீவனங்களும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com