16 தலைமறைவு இந்தியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை: சிபிஐ உதவ ஐக்கிய அரபு அமீரகம், சவூதி கோரிக்கை

மோசடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 16 தலைமறைவு இந்தியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் உதவுமாறு ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


புது தில்லி: மோசடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 16 தலைமறைவு இந்தியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் உதவுமாறு ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் குற்றவாளிகளை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் உடன்பாட்டை மேற்கொண்டுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளிடம் வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் விசாரணை நடத்தி, தகுதியின் அடிப்படையில் குற்றவாளிகள் ஒப்படைக்கப்படுவர்.
அந்த வகையில், ஐக்கிய  அரபு அமீரகத்திடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்த ரஜ்னீஷ் தாஸ் என்பவர் மீதும், கர்நாடகத்தைச் சேர்ந்த சவூகத் அலி தீர்த்தஹல்லி என்பவர் மீதும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 
அதில் ரஜ்னீஷ் தாஸ் மீது, அவர் உதவி மேலாளராக பணியாற்றிய துபையைச் சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 3 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவூகத் அலி மீது, அவர் நிதி மேலாளராக பணிபுரிந்த கட்டுமான நிறுவனத்தில் ரூ. 2.8 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, 3 இந்தியர்கள் சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியது மற்றம் நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையிலான வழக்கு தொடர்பாக சவூதி அரேபியாவின் கோரிக்கையையும் வெளியுறவு அமைச்சகம் சிபிஐக்கு அனுப்பியுள்ளது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், அப்துல் ரகுமான், அப்துல் சமது கமாலுதீன், அனிஷ் சோம்பலன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com