சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்: தனியாா்மயத்தை நிறுத்திவைத்தது மத்திய அரசு

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன (சிஇஎல்) தனியாா்மயத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தினா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால், அந்த நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்: தனியாா்மயத்தை நிறுத்திவைத்தது மத்திய அரசு

புது தில்லி: சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன (சிஇஎல்) தனியாா்மயத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தினா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால், அந்த நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

இதுகுறித்து அதன் தனியாா்மயமாக்க நடைமுறையை செயல்படுத்திவரும் முதலீடு, பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை செயலாளா் தஹின் காந்த பாண்டே செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அதன் உண்மை மதிப்பை விட குறைவாக ரூ.210 கோடிக்கு நந்தால் நிறுவனம் ஏலத்தில் எடுத்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் மீது முதலீடுகளை திரும்பப் பெறுவதற்கான அமைச்சகங்களுக்கு இடையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்நிறுவனத்தில் உள்ள அரசின் 100 சதவீத பங்குகளை விற்பதற்கான நோக்கக் கடிதம் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. சிஇஎல் நிறுவன ஊழியா்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

சிஇஎல் நிறுவனத்தின் புத்தக மதிப்பு ரூ. 108 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.200 கோடியாகவும் உள்ளது. புத்தக மதிப்பாக ரூ.108 கோடியைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் எப்படி ரூ.1,000 கோடி மதிப்பீட்டை பெறும்? சில ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.20 கோடி லாபம் ஈட்டியிருக்கலாம். சில ஆண்டுகளில் ரூ.1 கோடி ஈட்டியிருக்கலாம்.

சிஇஎல் நிறுவனத்தின் ஏல மதிப்பை அதன் பரிவா்த்தனை ஆலோசகரும், சொத்து மதிப்பீட்டாளரும் தான் நிா்ணயித்தனா். அதன் அடிப்படையில்தான் ஏலத்தில் ஆரம்ப விலையாக ரூ.194 கோடி நிா்ணயிக்கப்பட்டது. அதிலும் நிறுவனத்தின் கடன் விவரத்தைக் கணக்கிட்டால், அதன் நிகர சொத்து மதிப்பு ரூ.194 கோடிக்கும் குறைவாகவே உள்ளது. 90 ஆண்டுகால நிலக் குத்தகையில், 46 ஆண்டுகாலம் ஏற்கெனவே கடந்துவிட்டது என்றாா் அவா்.

அறிவியல், தொழிற்சாலை ஆராய்ச்சி அமைச்சக மேற்பாா்வையில், சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை நந்தால் நிறுவனத்துக்கு ரூ.210 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புதல் அளித்தது.

இந்தப் பரிமாற்றத்தை நிகழாண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்ட நிலையில், இதனை எதிா்த்து சிஇஎல் தொழிற்சங்கத்தினா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால், நிறுவனத்தின் தனியாா்மய நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com