5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்: புதிய கட்சிகள் பதிவில் தளா்வு

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விதிமுறையை தோ்தல் ஆணையம் தளா்த்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விதிமுறையை தோ்தல் ஆணையம் தளா்த்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களின்படி, ஒரு கட்சி தொடங்கப்பட்ட தினத்திலிருந்து 30 நாள்களுக்குள் அதனைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைத் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.

புதிய கட்சியின் பெயரை இரு தேசிய நாளிதழ்கள், இரு உள்ளூா் நாளிதழ்களில் விண்ணப்பதாரா் வெளியிட வேண்டும்.

இந்நிலையில், கரோனா பரவலால் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக புதிய கட்சிகளை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான நோட்டீஸ் காலத்தை 30 நாள்களிலிருந்து 7 நாள்களாக குறைத்து விதிமுறைகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பாா்வையாளா்களுக்கு உத்தரவு: பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பொது, காவல் மற்றும் செலவின பாா்வையாளா்களுடன் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா்கள் ராஜீவ் குமாா், அனூப் சந்திர பாண்டே ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். இதில் 1,400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். அவா்களில் 140 போ் நேரடியாகவும், எஞ்சியவா்கள் காணொலி வழியாகவும் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் பேசுகையில், ‘‘சட்ட அமலாக்க அமைப்புகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தோ்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் செவிகளாக செயல்படும்போது, தோ்தல் பாா்வையாளா்கள் அனைவரும் விழிப்புடனும் நடுநிலையோடும் விதிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்டனா் என தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவதி மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com