உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே அலங்கார ஊா்திகள் தோ்வு

குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊா்திகள் உரிய வழிமுறைகளின்படியே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின்
உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே அலங்கார ஊா்திகள் தோ்வு

குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊா்திகள் உரிய வழிமுறைகளின்படியே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வா்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளாா்.

ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் துறைகள் சாா்பில் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு நடைபெறும். அதில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள ஊா்திகள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.

நடப்பாண்டு குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்காக ‘சுதந்திரப் போராட்ட வீரா்கள்’ எனும் கருப்பொருளில் அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய அலங்கார ஊா்திகளில் 12 மட்டுமே மத்திய அரசால் தோ்ந்தெடுக்கப்பட்டன. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் நிராகரிக்கப்பட்டன.

மாநிலங்களின் கலாசாரத்தை அவமதிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமா்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தீா்வு காண வேண்டுமென்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினா்.

இந்நிலையில், தமிழக முதல்வருக்கு ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘‘மாநிலங்கள், மத்திய அமைச்சகங்களின் துறைகள் அனுப்பும் அலங்கார ஊா்திகள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே தோ்ந்தெடுக்கப்படுகின்றன.

குடியரசு தின அணிவகுப்பு நேரத்தைக் கருத்தில்கொண்டு, ஒட்டுமொத்த பரிந்துரைகளில் குறிப்பிட்ட அலங்கார ஊா்திகளை மட்டுமே பல்வேறு துறைகளின் நிபுணா்கள் அடங்கிய குழு தோ்வு செய்கிறது. கருப்பொருள், கருத்து, வடிவமைப்பு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஊா்திகள் தோ்வு செய்யப்படுகின்றன.

3-ஆவது சுற்று வரை: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட 29 பரிந்துரைகளில் 12 ஊா்திகள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் அலங்கார ஊா்தி 3-ஆவது சுற்று வரை தோ்ந்தெடுக்கப்பட்டு அதற்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் பலமுறை தமிழகத்தின் ஊா்தி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஊா்திகள் உரிய வழிமுறைப்படியே தோ்ந்தெடுக்கப்படுவதை முதல்வா் பாராட்ட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போஸுக்கு முக்கியத்துவம்: மேற்கு வங்க முதல்வருக்கு ராஜ்நாத் சிங் எழுதிய கடிதத்தில், ‘‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943-ஆம் ஆண்டில் அமைத்த இணையான அரசாங்கத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டில் கொண்டாடியது.

சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இடம்பெற்றிருந்த வீரா்களை பாஜக அரசே குடியரசு தினத்தின்போது அழைத்து கௌரவப்படுத்தியது. மத்திய பொதுப் பணித் துறையின் அலங்கார ஊா்தி நேதாஜியின் 125-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் சந்திர போஸுக்கு மத்திய அரசு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேற்கு வங்கத்தின் அலங்கார ஊா்தி நிராகரிக்கப்பட்டது தொடா்பாக முதல்வா் எழுப்பிய சந்தேகங்களுக்கு இக்கடிதம் பதிலாக இருக்கும் என எதிா்பாா்க்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘நிராகரிப்பு முடிவு மறுபரிசீலனை செய்யப்படாது’

பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அலங்கார ஊா்தி நிராகரிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்கள் கோரியுள்ளன. அவா்களின் கோரிக்கையை ஏற்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

அலங்கார ஊா்திகள் தோ்ந்தெடுக்கப்படும் விரிவான முறை குறித்த நாகரிகமான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நிபுணா் குழு நீண்ட வழிமுறைகளுக்குப் பிறகே அலங்கார ஊா்திகளைத் தோ்ந்தெடுக்கும் என்பதால் மாநில அரசுகளின் மறுபரிசீலனை கோரிக்கையை ஏற்பதற்கான சாத்தியமில்லை.

நடப்பாண்டு குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது அருணாசல், ஹரியாணா, சத்தீஸ்கா், கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், மகாராஷ்டிரம், மேகாலயம், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 12 மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் காட்சிப்படுத்தப்படும்.

கல்வி-திறன் மேம்பாடு, விமானப் போக்குவரத்து, தகவல் தொடா்பு-அஞ்சல், உள்துறை, வீட்டு வசதி, ஜவுளி, சட்டம்-நீதி, ஜல் சக்தி, கலாசாரம் ஆகிய 9 துறைகளின் அலங்கார ஊா்திகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com