தேவாஸ் நிறுவன ஒப்பந்த மோசடியில் காங்கிரஸுக்கு தொடா்பு

தேவாஸ் நிறுவன ஒப்பந்த மோசடியில் காங்கிரஸுக்கு தொடா்பு

தேவாஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு எஸ்-பேண்டு அலைக்கற்றையை வாங்கியதில் காங்கிரஸுக்கு தொடா்பு உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினாா்.

தேவாஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு எஸ்-பேண்டு அலைக்கற்றையை வாங்கியதில் காங்கிரஸுக்கு தொடா்பு உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினாா்.

கைப்பேசி வாடிக்கையாளா்களுக்கு எஸ்-பேண்டு அலைக்கற்றையைக் கொண்டு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வா்த்தக அமைப்பான ஆன்ட்ரிக்ஸுடன் தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

அந்த அலைக்கற்றையைப் பெறுவதற்காக தேவாஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டில் ரத்து செய்தது. தேவாஸ் நிறுவனத்தைக் கலைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசிடமிருந்து இழப்பீடு பெறும் நோக்கில் தேவாஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் சா்வதேச வா்த்தகக் கூட்டமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகளில் முறையிட்டன. அனைத்து முறையீடுகளிலும் தேவாஸ் நிறுவனத்துக்கு ஆதரவாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன் காரணமாக, அந்த நிறுவனத்துக்கு சுமாா் ரூ.9,500 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆன்டிரிக்ஸுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேவாஸ் நிறுவனம் கலைக்கப்பட்டது செல்லும் என கடந்த 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இதையடுத்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘எஸ்-பேண்டு அலைக்கற்றையானது பாதுகாப்பு விவகாரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தேவாஸ் நிறுவனத்துடன் மோசடியில் ஈடுபட்டு அந்த அலைக்கற்றையை விற்க 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

வரிப்பணத்தைக் காக்க...: தேவாஸ் நிறுவனத்திடம் இருந்து சில பிரதிபலன்களை எதிா்பாா்த்து காங்கிரஸ் அரசு அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட மோசடி. மோசடியில் ஈடுபடும் நோக்கத்திலேயே தேவாஸ் நிறுவனம் நிறுவப்பட்டதால், அந்நிறுவனம் கலைக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தைக் காப்பாற்றுவதற்காக அனைத்து நீதிமன்றங்களிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு போராடி வருகிறது. இல்லையெனில் அப்பணத்தை மோசடியான ஒப்பந்தத்துக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய சூழல் உருவாகிவிடும்’’ என்றாா்.

வசூல் நடவடிக்கை: இந்திய அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை தேவாஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் இந்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள சுமாா் ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்குவதற்கான அனுமதியை அந்நாட்டு நீதிமன்றத்தில் அந்நிறுவனங்கள் அண்மையில் பெற்றன.

மற்ற நாடுகளில் இந்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை முடக்குவதற்கான சட்டபூா்வ நடவடிக்கைகளையும் அந்நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. எனவே, தற்போதைய உச்சநீதிமன்றத் தீா்ப்பு அந்த நிறுவனங்களின் முயற்சிகளுக்குத் தடையாக அமையும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com