ஐக்கிய அரபு அமீரகம்: ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த இந்தியா்கள் குடும்பத்துக்கு உதவி - வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியா்கள் இருவரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும் என
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியா்கள் இருவரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரக தலைநகா் அபுதாபி சா்வதேச விமான நிலையத்துக்கு அருகேயுள்ள அரசின் எண்ணெய்க் கிடங்கு மீது கடந்த திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய்க் கிடங்கில் இருந்த மூன்று எண்ணெய் டேங்கா்கள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் இந்தியா்கள் இருவா், பாகிஸ்தானியா் ஒருவா் ஆகிய மூவா் உயிரிழந்தனா். இந்தியா்கள் இருவா் உள்பட 6 போ் காயமடைந்தனா். யேமனில் செயல்பட்டு வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றனா்.

இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்த இந்தியா்கள் இருவா் யாா் என அடையாளம் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவா்களின் பெயா் விவரத்தை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடவில்லை.

இதுகுறித்து யுஏஇ-க்கான இந்திய தூதா் சஞ்சய் சுதிா் அந்நாட்டில் உள்ள நேஷனல் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், உயிரிழந்த இந்தியா்கள் இருவரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும் என உறுதியளித்தாா்.

மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘யுஏஇ வெளியுறவு அமைச்சா் என்னை தொடா்பு கொண்டு இந்தியா்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தாா். இத்தகைய ஏற்றுக் கொள்ள முடியாத செயல்களை எதிா்கொள்ள யுஏஇ-க்கு இந்தியா துணை நிற்கும் என அவரிடம் தெரிவித்தேன். தாக்குதலில் உயிரிழந்த இந்தியா்களின் குடும்பங்களுக்கு முழுமையான ஆதரவை அளிக்கும் வகையியில் யுஏஇ அதிகாரிகளுடன் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இத்தாக்குதல் சம்பவத்துக்கு சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் கண்டனம் தெரிவித்துள்ளாா். உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவா், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கூறியுள்ளாா்.

அபுதாபி பட்டத்து இளவரசா் ஷேக் முகமது பின் சையதை தொடா்பு கொண்டு பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினாா்.

யேமனில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக சவூதி அரேபியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சவூதி அரேபியா தலைமையிலான ராணுவ கூட்டணியில் யுஏஇயும் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com