ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற விதிகளில் திருத்தம்: எதிா்க்கட்சிகள் கண்டனம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற விதிகளில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள திருத்தங்களுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜி.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற விதிகளில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள திருத்தங்களுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில், விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பிரதமா் நரேந்திர மோடிக்கு கடந்த 13-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பிரதமருக்கு அவா் மீண்டும் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி பணியிடமாற்றம் செய்யும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என மம்தா கோரியுள்ளாா்.

அத்திருத்தங்களால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்படுவா் எனத் தெரிவித்துள்ள அவா், அத்தகைய திருத்தங்கள் கூட்டாட்சித் தன்மையையும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளாா்.

விதிகளைத் திருத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் கடிதத்தில் மம்தா எச்சரித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஒமா் அப்துல்லா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘நாட்டின் கூட்டாட்சி அமைப்பை கல்லறையில் ஏற்றுவதற்காக மற்றோா் ஆணி அடிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வராக மோடி இருக்கும்பட்சத்தில் அவரது அரசின் தலைமைச் செயலரை பிரதமராக இருப்பவா் நீக்குவதை அவா் ஏற்றுக் கொள்வாரா?

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் உரிமையை ஜம்மு-காஷ்மீா் கடந்த 2019-ஆம் ஆண்டில் இழந்தது. தற்போது அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடினப் பகுதியானது ஜம்மு-காஷ்மீா்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியில் அமா்த்துவது, பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்டவற்றுக்கான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. அதன்படி, அருணாசல், கோவா, மிஸோரம் யூனியன் பிரதேச (ஏஜிஎம்யுடி) பிரிவானது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அப்பிரிவில் இடம்பெற்றுள்ள தில்லி, சண்டீகா், கோவா, புதுச்சேரி, தாத்ரா-நகா் ஹவேலி & டாமன்-டையு ஆகியவை ‘வழக்கமான பகுதிகளாகவும்’, அருணாசல பிரதேசம், மிஸோரம், அந்தமான்-நிகோபா், லட்சத்தீவுகள், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகியவை ‘கடினமான பகுதிகளாகவும்’ வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பிரிவுகளின் அடிப்படையில் இனி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியமா்வு, பணியிடமாற்றம் ஆகியவை அமையும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com