சிறந்த தேர்தல் நடைமுறை: 8 தமிழகம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு தேசிய விருதுகள்

2021-ஆம் ஆண்டு தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முறையாக நடத்தி வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டது, தேர்தல் முறைகேடுகளைத் தடுத்தது
சிறந்த தேர்தல் நடைமுறை: 8 தமிழகம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு தேசிய விருதுகள்

2021-ஆம் ஆண்டு தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முறையாக நடத்தி வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டது, தேர்தல் முறைகேடுகளைத் தடுத்தது உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 8 தமிழக, புதுச்சேரி தேர்தல் அதிகாரிகளுக்கு 12-ஆவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 நாடு முழுவதும் ஐந்து விதமான பிரிவுகளில் 23 பேருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய விருதுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் இந்த விருதுகளை மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தில்லியில் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இதில் கடந்தாண்டு 2021 -இல் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு தரப்பினருக்கு நடப்பு ஆண்டின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
 சிறந்த மாநில விருதுகள்: சிறப்பாக செயல்படும் மாநில விருதுகள் பிரிவில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிற்கு வழங்கப்பட்டது.
 தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுதந்திரமாகவும் நியாயமான முறையில் தேர்தலை சுமூகமாக நடத்த தகவல் தொழில்நுட்ப முயற்சிகள், பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பிற தொடர்புடைய அம்சங்களுக்காக இவ்விருது சத்ய பிரத சாகுவிற்கு வழங்கப்பட்டது.
 இதே 2021 ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்ட அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நிதின் காடேவிற்கு சிறந்த மாநிலங்களுக்கான விருது கொடுக்கப்பட்டது.
 சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகளின் பொதுப்பிரிவில் 10 விருதுகள் வழங்கப்பட இதில் மூன்று விருதுகள் தமிழக, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பெற்றனர். இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வி.விஷ்ணு, தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் "வாக்குச் சாவடி வழிகாட்டி" என்கிற செயலி மூலம் சமூக ஊடகங்களின் போலிச் செய்திகள், வேட்பாளர்களின் செலவுகள் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக கண்காணிக்கப்பட அவர் இந்த விருதை பெற்றார்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்: இதேமாதிரி வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு புதுமையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமைக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ்க்கும் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் மத்திய சட்ட அமைச்சரிடமிருந்து இவ்விருதை பெற்றார்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய், உள்ளாட்சி, காவல் துறை உள்ளிட்ட முழு நிர்வாகத்தையும் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ஈடுத்தப்பட்டது.
 சுமார் 1 லட்சம் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு தபால் வழியாக கடிதம் எழுதி கட்டாயமாக வாக்களிக்க வேண்டும், அதுவும் வோட்டுக்கு பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் போன்றவைகளை கடிதத்தின் வாயிலாக மாணவர்கள் தெரிவித்தனர்.
 பிரபலமான முத்து குளியல், கல்லூரி மாணவர்கள் ஆகியவை மூலமாக வாக்களிப்பது குறித்த விடியோ உருவாக்கப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. இதற்காக இந்த மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி என்கிற முறையில் டாக்டர் செந்தில் ராஜ் விருதை பெற்றார்.
 மேலும் புதுச்சேரி தேர்தலில் காரைக்கால் பகுதியில் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர் நிகரிகா பட், தமிழகம் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வருமான வரி புலனாய்வுத் துறை இயக்குநர் ஜெனரல் பிரவீண் குமார், கூடுதல் இயக்குநர் பி.எஸ். சிவசங்கரன் ஆகியோர் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களது செலவினங்களை கண்காணித்து 83 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு ரூ.103 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கைப்பற்றியதற்காக விருதுகளை பெற்றனர்.
 இதே மாதிரி அம்பாச முத்திரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அதிகாரியும் சேரன்மாதேவி துணை ஆட்சியருமான பிரதிக் தயாள், அதிக வாக்குபதிவு செய்த புதுச் சேரி மாநில துணை தலைமை தேர்தல் அதிகாரி பி.தில்லைவேல் ஆகியோர் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதை பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com