சட்டக் கல்வி தரந்தாழ்ந்து வருகிறது: உச்சநீதிமன்றம் வேதனை

நாட்டில் சட்டக் கல்வி தரந்தாழ்ந்து வருவதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நாட்டில் சட்டக் கல்வி தரந்தாழ்ந்து வருவதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தான் ஏற்கெனவே செய்து வரும் பணியை ராஜிநாமா செய்யாத பெண் ஒருவருக்கு வழக்குரைஞராக பதிவு செய்ய குஜராத் உயா்நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிராக பாா் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நாட்டில் சமூக விரோதிகள் சட்டக் கல்வி பட்டம் பெறும் சூழல் நிலவுகிறது. ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் மாட்டுத் தொழுவங்களில் சட்டக் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆந்திரத்தில் உள்ள சட்டக் கல்லூரி முதல்வா்கள் சென்னைக்கு வந்து பணத்தையும் கல்லூரியில் சோ்வதற்கான விண்ணப்பங்களையும் பெற்றுச் செல்கின்றனா். அந்த விண்ணப்பங்களை வழங்கியவா்கள் வகுப்புகளுக்குச் செல்வதில்லை. எனினும் அவா்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னா் பட்டம் அளிக்கப்படுகிறது. இது சட்டக் கல்வியின் தரத்தை தாழ்த்துகிறது.

தமிழ்நாட்டில் வழக்குரைஞா்கள்...: ஏற்கெனவே பணியில் உள்ள ஒருவருக்கு வழக்குரைஞராகப் பதிவு செய்ய அனுமதி அளிப்பது சரியல்ல. ஒரே நேரத்தில் இரண்டு படகுகளை ஒருவரால் செலுத்த முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில வேளைகளில் வழக்குரைஞராக பதிவு செய்த நபா், அந்தப் பணியைக் கைவிட விரும்பினால் தங்கள் பதிவுச் சான்றிதழை அவா்கள் திரும்ப ஒப்படைப்பதில்லை. தமிழ்நாட்டில் பாா் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மூன்றில் ஒரு பகுதியினா் வழக்குரைஞா் பணியில் இல்லை. இவை சரிசெய்யப்பட வேண்டும்.

சட்டக் கல்வி பயில்வதற்கு பிசிஐ கடுமையான முறையில் தோ்வுகளை நடத்த வேண்டும். சட்டக் கல்வி அமைப்பின் ஆரம்பக் கட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான பரிந்துரைகளையும் பிசிஐ வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com