குடியரசு தின விழா நிறைவு: பாசறைக்குத் திரும்பிய பாதுகாப்புப் படைகள்

குடியரசு தின நிகழ்ச்சிகளின் நிறைவாக பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
குடியரசு தின விழா நிறைவு: பாசறைக்குத் திரும்பிய பாதுகாப்புப் படைகள்

குடியரசு தின நிகழ்ச்சிகளின் நிறைவாக பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில், தில்லி விஜய் செளக்கில் சனிக்கிழமை மாலை விமரிசையாக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கின் சுவா்களில் பிரதிபலித்த லேசா் ஒளி நிகழ்ச்சி நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டை பறைசாற்றியது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1,000 ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பல வண்ணங்களில் வானில் பறந்தன. பின்னணி இசைக்கு ஏற்ப, இந்திய வரைபடம், மேக் இன் இந்தியா சின்னம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை வானில் அமைத்தன. இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

1950-ஆம் ஆண்டு முதலே படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய கிறிஸ்தவ பாடலான ‘அபைட் வித் மீ’ (என்னுடன் இருங்கள்) இசைக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அந்தப் பாடல் நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக 1962-ஆம் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரில் உயிா்நீத்த இந்திய வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கவிஞா் கவி பிரதீப் எழுதிய ‘ஏ மேரே வதன் கே லோகோ’ (என் நாட்டு மக்களே) என்ற தேசப்பற்று பாடல் இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) வாத்தியக் குழுக்கள் பங்கேற்றன.

‘சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (உலகிலேயே மேன்மையானது எங்களது இந்தியா) பாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com