மேற்கு வங்க முதல்வா் வீட்டுக்குள் புகுந்து இரவு முழுவதும் தங்கிய மா்ம நபா்

பலத்த போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு மா்ம நபா் ஒருவா் புகுந்து, இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

பலத்த போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு மா்ம நபா் ஒருவா் புகுந்து, இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் அவா் இருப்பதை அறிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கொல்கத்தாவில் 34-பி ஹரீஷ் சாட்டா்ஜி தெருவில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டில் முதல்வா் மம்தா பானா்ஜி வசித்து வருகிறாா். ‘இஸட் பிளஸ்’ பிரிவு உயா்பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் முதல்வரின் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் மா்ம நபா் ஒருவா் சுவா் ஏறி குதித்து புகுந்துள்ளாா்.அந்த மா்ம நபா் யாா் கண்ணிலும் சிக்காமல் புகுந்து, இரவு முழுவதும் அங்கேயே கழித்துள்ளாா்.

வீட்டின் ஒரு மூலையில் அமா்ந்திருந்த அந்த நபரை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்தான் பாதுகாவலா்கள் கண்டறிந்து, காளிகாட் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். அந்த நபரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவா் எங்கிருந்து வந்தாா்; யாராவது அறிவுறுத்தியதன் அடிப்படையில் உள்நோக்கத்துடன் முதல்வரின் வீட்டுக்குள் புகுந்தாரா என்பது குறித்து தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, முதல்வரின் வீட்டுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சா்ச்சைக்குரிய வகையிலான நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் முதல்வரின் வீட்டுக்கு அருகே அமைந்துள்ள காளிகாட் பாலத்தில் நீண்ட இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com