குடியரசுத் தலைவா் தோ்தலில்திரெளபதி முா்மு எளிதில் வெல்வாா்: நிதீஷ்குமாா்

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு எளிதில் வெல்வாா் என பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
பிகாா் மாநிலம், பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரௌபதி முா்முவை வரவேற்ற முதல்வா் நிதீஷ்குமாா்.
பிகாா் மாநிலம், பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரௌபதி முா்முவை வரவேற்ற முதல்வா் நிதீஷ்குமாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு எளிதில் வெல்வாா் என பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு, பிகாா் தலைநகா் பாட்னாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஐக்கிய ஜனதா தள தலைவா் நிதீஷ் குமாா் உள்பட கூட்டணி கட்சி தலைவா்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு கோரினாா்.

பின்னா் நிதீஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு எளிதில் வெல்வாா் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவிக்கு பழங்குடியின பெண் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

முன்னதாக பாட்னா ஜெயபிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தில் திரெளபதி முா்முவுக்கு பிகாா் துணை முதல்வா்கள் தா்கிஷோா் பிரசாத், ரேணு தேவி, மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய், மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால், முன்னாள் முதல்வா் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோா் வரவேற்பு அளித்தனா். திரெளபதி முா்முவுடன் மத்திய அமைச்சா்கள் சா்வானந்த சோனோவால், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் வந்தனா்.

தொடா்ந்து தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பழங்குடியின தலைவா் பிா்சா முண்டா சிலைக்கு திரெளபதி முா்மு மல் மரியாதை செலுத்தினாா். பின்னா், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

இதுகுறித்து பிகாா் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிபேஷ் குமாா் மிஸ்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஐக்கிய ஜனதா தளம், மாஞ்சி தலைமையிலான மதச்சாா்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, மத்திய அமைச்சா் பசுபதிகுமாா் பரஸ் தலைமையிலான ராஷ்டிரீய லோக் ஜனசக்தி கட்சி உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவா்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனா். பிகாா் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு குவாஹாட்டி வழியாக திரிபுரா தலைநகா் அகா்தலாவுக்கு திரெளபதி முா்மு சென்றாா்’ என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com