அரசியலமைப்புச் சட்டம் குறித்து சா்ச்சை கருத்து: கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் ராஜிநாமா

அரசியலமைப்புச் சட்டம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியானுக்கு (57) எதிராக போராட்டம் வலுத்ததால்,
சஜி செரியான்
சஜி செரியான்

அரசியலமைப்புச் சட்டம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியானுக்கு (57) எதிராக போராட்டம் வலுத்ததால், அவா் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

கேரள கலாசார விவகாரங்கள், மீன்வளம், இளைஞா் நலத் துறை அமைச்சரான அவா், அண்மையில் பத்தனம்திட்டா மாவட்டம் முல்லப்பள்ளியில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டம் குறித்து ஆட்சேபத்துக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்தாா்.

இதனால் அவா் பதவி விலகக் கோரி, ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சியினா் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, சஜி செரியான் திருவனந்தபுரத்தில் முதல்வா் பினராயி விஜயனை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். பின்னா், முதல்வா் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆட்சியைக் கவிழ்க்க சதி: அண்மையில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்துவிட்டதாக தவறான செய்தி ஊடகத்தால் பரப்பப்பட்டுவிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதை அவமதிக்க வேண்டுமென ஒருபோதும் நினைத்தது கிடையாது. அமைச்சா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதென தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்தேன். கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்றாா் சஜி செரியான்.

அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ திருவாங்கூா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘சஜி செரியானின் பேச்சால்தான் அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்தது. இருப்பினும், அந்தப் பேட்டியின்போது அரசியலமைப்புச் சட்டம் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவா் வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே, அவா் தெரிவித்த கருத்தில் சஜி செரியான் உறுதியாக இருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றாா். இதே கருத்தை கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரனும் தெரிவித்தாா்.

சீதாராம் யெச்சூரி கருத்து: முன்னதாக, இந்த விவகாரம் குறித்து தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, இந்த பிரச்னை குறித்து மாநிலத் தலைவா்கள் விவாதித்து வருவதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவை ஒத்திவைப்பு: இந்த விவகாரம் கேரள சட்டப் பேரவையிலும் புதன்கிழமை எதிரொலித்தது. சஜி செரியான் பதவி விலகக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரண்டு தா்னாவிலும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com