குடியரசுத் தலைவர் தேர்தல்: பயணிகள் போலப் பறக்கும் வாக்குப் பெட்டிகள்!

வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் தில்லியில் இருந்து பயணிகளைப் போல மாநிலத் தலைநகரங்களுக்கு விமானங்களில் பறந்து கொண்டிருக்கின்றன.

வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் தில்லியில் இருந்து பயணிகளைப் போல மாநிலத் தலைநகரங்களுக்கு விமானங்களில் பறந்து கொண்டிருக்கின்றன.
 குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு புது தில்லியிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத் தலைநகரங்களிலும் நடைபெறும். இதற்காக புது தில்லியில் இருந்து வாக்குப்பெட்டிகள் மாநிலத் தலைநகரங்களுக்கு பயணிகளைப் போல அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக விமானத்தில் "திருவாளர் வாக்குப்பெட்டி' என்ற பெயரில் இருக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானங்களில் வாக்குச்சீட்டுகள், வாக்களிப்பதற்கான சிறப்பு பேனா ஆகியவற்றை விமானத்தில் கொண்டு செல்லும் அதிகாரியின் பக்கத்து இருக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 இவ்வாறு தில்லியில் இருந்து 14 வாக்குப் பெட்டிகள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. 16 வாக்குப் பெட்டிகள் புதன்கிழமை அனுப்பப்பட உள்ளன. நாடாளுமன்றத்திலும் தில்லி சட்டப் பேரவையிலும் வைக்கப்பட உள்ள வாக்குப்பெட்டி புதன்கிழமை அனுப்பி வைக்கப்படும்.
 ஹிமாசலப் பிரதேசத்துக்கான வாக்குப்பெட்டி சாலை வழியாக அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் துணை தேர்தல் அதிகாரியும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து ஓர் அதிகாரியும் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்துக்கு வந்து தேர்தல் உபகரணங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் அதே நாளில் மாநிலத் தலைநகரங்களுக்குத் திரும்புகின்றனர்.
 வாக்குப்பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மாநிலத் தலைநகரங்களை அடைந்தவுடன் அவை முன்கூட்டியே சுத்திகரிக்கப்பட்ட, முறையாக சீலிடப்பட்ட அறைகளில் வைக்கப்படும். இந்த நடவடிக்கை முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
 குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகளும் இதர தேர்தல் உபகரணங்களும் தில்லிக்கு திருப்பி அனுப்பப்படும். விமானங்களில் பயணம் செய்யும் அதிகாரிகளுக்கு பக்கத்து இருக்கையிலேயே வைக்கப்பட்டு அவை தில்லிக்கு எடுத்துச் செல்லப்படும். இம்முறை அவற்றை புது தில்லியில் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளர் பெற்றுக் கொள்வார்.
 நாடாளுமன்ற வளாகத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் தகுதி கிடையாது.
 அதேபோல எம்எல்சிக்களுக்கு இத்தேர்தலில் வாக்களிக்கும் தகுதி கிடையாது.
 துணைத் தேர்தல் அதிகாரிகளிடம் பேசுகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறுகையில், தேர்தல் ஆணையக் குழுக்கள் தேர்தல் விதிகளை தீவிரமாகப் பின்பற்றுவது இத்தேர்தலை குறைகள் ஏதுமின்றி நடத்த வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார். உஷார் நிலையில் இருக்குமாறும் தேர்தல் உபகரணங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் அனுப்பி வைப்பதிலும் விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com