தேசிய சின்னத்தில் சிங்கங்கள் சீற்றம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம்

புதிய நாடாளுமன்ற வளாகத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்கள் சீற்றத்துடன் காணப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 தில்லியில் உருவாகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னம்.
 தில்லியில் உருவாகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னம்.

புதிய நாடாளுமன்ற வளாகத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்கள் சீற்றத்துடன் காணப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தின் வடிவத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷும் உடனிருந்தனர். இந்த நிகழ்வில் அரசியல் சாசன நெறிகளை மோடி மீறிவிட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் அழைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
 இது குறித்து மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவரான அதீர் ரஞ்சன் சௌதரி, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் "நரேந்திர மோடி அவர்களே, தேசிய சின்னத்தில் உள்ள சிங்கத்தின் முகத்தை கவனியுங்கள். சாரநாத்தில் உள்ள சிலையில் இருக்கும் சிங்கங்களின் உருவத்தை அவை பிரதிபலிக்கிறதா அல்லது கிர் காடுகளில் உள்ள சிங்கத்தின் சிதைக்கப்பட்ட உருவமாக அது உள்ளதா என்பதைப் பாருங்கள். அதை சரிபார்த்து தேவை ஏற்பட்டால் உரிய மாற்றத்தைச் செய்யுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
 திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜவஹர் சர்க்கார், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் "நமது தேசிய சின்னமான கண்ணியமிகு அசோகர் சிங்கங்களுக்கு அவமதிப்பு நேர்ந்துள்ளது. தேசிய சின்னத்தின் அசல் வடிவம் மென்மையாக உள்ளது. மோடி வெளியிட்டுள்ள வடிவத்தில் சிங்கங்கள் சீற்றத்துடனும் பொருத்தமின்றியும் காணப்படுகின்றன. அவமானகரமாக உள்ள அதை உடனடியாக மாற்றுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
 இதேபோல் வரலாற்று ஆய்வாளர் எஸ்.இர்ஃபான் ஹபீபும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட உள்ள தேசியச் சின்னத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாகக் கூறுகையில் "நமது தேசிய சின்னத்தில் தலையிடுவது தேவையற்றது மட்டுமின்றி தவிர்க்கக் கூடியதுமாகும். நமது சிங்கங்கள் ஏன் சீற்றத்துடன் காணப்பட வேண்டும்?' என்று குறிப்பிட்டுள்ளார்.
 மூத்த வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் கூறுகையில் "நமது தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள் அமைதியாகவும் கண்ணியமாகவும் அமர்ந்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்கள் கூர்மையான கோரைப்பற்களுடன் கோபத்துடன் உள்ளன.
 இதுதான் மோடியின் புதிய இந்தியா' என்று விமர்சித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com