காங்கிரஸ் ஆட்சியின்போது உளவு பார்க்க 5 முறை இந்தியா வந்த பாக். செய்தியாளர்: பாஜக குற்றச்சாட்டு

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஐந்து முறை இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் செய்தியாளர், இங்கிருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு சில முக்கிய ரகசியங்களைச் சேகரித்துச் சென்றது

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஐந்து முறை இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் செய்தியாளர், இங்கிருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு சில முக்கிய ரகசியங்களைச் சேகரித்துச் சென்றது தொடர்பாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும் காங்கிரஸ் கட்சியும் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கெüரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தானில் செய்தியாளர் நஷ்ரத் மிர்சா அளித்த பேட்டி ஒன்றில், "என்னை 2005-2011 காலகட்டத்தில் இந்திய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தங்கள் நாட்டுக்கு வருமாறு ஐந்து முறை அழைத்ததோடு பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்' என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இக்குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டுமின்றி ஹமீது அன்சாரியும் மெüனம் காத்து வருகின்றனர். பாகிஸ்தான் செய்தியாளர் நஷ்ரத் மிர்சா, ஹமீது அன்சாரியுடன் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஹமீது அன்சாரி ஆகியோர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.
அன்சாரியிடம் இருந்து நஷ்ரத் மிர்சா பெற்ற ரகசியங்கள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மிர்சா இந்தியாவில் நடைபெற்ற ஒரு பயங்கரவாதம் தொடர்பான கருத்தரங்கத்துக்கும் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இந்தியாவில் 7 நகரங்களுக்குச் சென்றுவர நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தகவல்களைத் தெரிவிக்கும் அந்நபர் இந்தியாவுக்கு விருந்தோம்பலின் பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறார். இதுதான் பயங்கரவாதத்தை அழிக்க காங்கிரஸ் மேற்கொண்ட கொள்கையா? இது அக்கட்சியின் விஷமபுத்தி.
நமது அரசு பயங்கரவாதத்தை வேருடன் களைந்து வருகிறது. அதேநேரத்தில் காங்கிரஸின் மனநிலை வேறுவிதமாக உள்ளது என்றார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் பலரும் அன்சாரியை விமர்சித்துள்ளனர்.
அன்சாரி மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள அன்சாரி, இந்திய தேசப் பாதுகாப்புக்கு எதிராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. சர்வதேச பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் பங்கேற்பவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் முடிவு செய்தார்கள். அந்த மாநாட்டை நான் தொடக்கி வைத்தேன். தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவோ, சந்திக்கவோ இல்லை என்று கூறியுள்ளார்.
பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது. "அன்சாரி மற்றும் சோனியா காந்தி மீது மிகவும் மோசமான வகையில் அவதூறு பரப்பும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது' என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com