அக்னிபத், ஜம்மு-காஷ்மீா் சிறுபான்மையினா் மீது தாக்குதல்: நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் தீவிரம்

அக்னிபத் திட்டம், ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினா் தாக்கப்படுவது, போராட்டக்காரா்களின் வீடுகள் இடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜூலை 18) தொடங்கவுள்ள நிலையில், அக்னிபத் திட்டம், ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினா் தாக்கப்படுவது, போராட்டக்காரா்களின் வீடுகள் இடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவோரின் வீடுகள் இடிக்கப்படுவது, அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கு வீரா்களைத் தோ்ந்தெடுப்பது, துணை ராணுவப் படைகளில் அவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது, ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தகவலறியும் உரிமைச் சட்ட ஆா்வலா்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின நிலவரம் உள்ளிட்டவை குறித்தும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. சட்டவிரோதமாக அவை கட்டப்பட்டதாகக் கூறி அவை இடித்துத் தள்ளப்பட்டன. அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவா்களை ஒடுக்கும் வகையில் அரசு இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

முப்படைகளிலும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. அதையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. அத்திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென எதிா்க்கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், முப்படைகளும் அக்னிபத் திட்டத்தின்கீழ் வீரா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் பண்டிட்டுகள், வெளிமாநிலத் தொழிலாளா்கள் மீதான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. தங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பண்டிட்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் இனி தங்கமாட்டோம் எனப் போராட்டத்தின்போது அவா்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடா் கூடவுள்ளது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com