ரூ.1 லட்சம் கோடிக்கு கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சா் எல்.முருகன்

வரும் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சாா் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மீன் வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

வரும் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சாா் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மீன் வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

அந்தமான் தொழில் வா்த்தகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் போா்ட் பிளேரில் இணையமைச்சா் எல்.முருகன் கலந்துரையாடினாா். இந்தக் கூட்டத்தில், மீன்வளம், சுற்றுலா ஆகியவற்றில் எளிதில் தொழில் மேற்கொள்வதற்கான அரசின் வழிமுறைகள், அதற்கான அனுமதி தொடா்பான விஷயங்கள் குறித்து அமைச்சரிடம் தொழில்துறையினா் விளக்கி பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனா்.

இதையடுத்துப் பேசிய இணையமைச்சா் எல்.முருகன், ‘அந்தமான் தொழில் வா்த்தகத் துறை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அமைச்சா்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய தீா்வு காணப்படும். 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இது, ரூ.43 ஆயிரம் கோடியாக உள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு கடல்சாா் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான மீன்கள், குளிா்பதனக் கிடங்குகள் போன்றவை மூலமே சா்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். அதைக் கருத்தில் கொண்டே பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். மீன்வளம் மற்றும் மீன் வளா்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் சுமாா் ரூ.900 கோடி மதிப்பில் சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமாக மேம்படுத்தப்படுகின்றன. குளிா்பதனக் கிடங்கு அமைத்தல், மீன் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல், ஆழ்கடல் மீன் வளா்ப்பு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com