மழை பெய்யாததால் கடவுளுக்கு எதிராக விவசாயி கொடுத்த புகார்: பின்னணி என்ன ?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் இந்து கடவுள் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மழை பெய்யாததால் கடவுளுக்கு எதிராக விவசாயி கொடுத்த புகார்: பின்னணி என்ன ?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் இந்து கடவுள் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தில் இந்திரன் மழைக் கடவுளாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டம் ஜாலா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி சுமித் குமார் யாதவ். இவர் அந்த பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற "சம்பூர்ண சமாதான் திவஸ்"  நிகழ்ச்சியில், இவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் கர்னல்கஞ்ச் தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவரளித்த புகார் மனுவில், புகார் எண் 684. “இந்தப் புகாரின் மூலம், மரியாதைக்குரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவது, எனது கிராமத்தில் கடந்த பல மாதங்களாக தேவையான அளவு மழை பெய்யாததால், கடுமையான வறட்சி காணப்படுகிறது. வறட்சியால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமை கால்நடைகள் மற்றும் விவசாயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வறட்சிக்கு காரணமான இந்திரன் மீது நடவடிக்கை தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கர்னல்கஞ்ச் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தார். 

ஆனால், அந்த புகார் மனுவை தாசில்தார் படிக்காமலே மேல் நடவடிக்கைக்காக மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். புகார் மனுவில் தாசில்தாரின்  கையொப்பம், அதிகாரப்பூர்வ முத்திரை மற்றும் 'அடுத்த நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது' என்ற குறிப்பு உள்ளது. 

இதையடுத்து தற்போது இந்த புகாரின் நகல் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, மாவட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சிஆர்ஓ ஜெய் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த புகார் மனுவை உயர் அதிகாரிகளுக்கு தான் அனுப்பவில்லை என்று தாசில்தார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், தாசில்தார் கூறுகையில், சம்பூர்ண சமாதான் திவஸ் அன்று பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். மேலே குறிப்பிட்டது போன்ற மனுக்கள் எந்த அலுவலகத்துக்கும் அனுப்பப்படாது. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

இந்திரன் மீதான புகார் வைரலாக பரவியதை அடுத்து, மாவட்டம் முழுவதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தாசில்தார் புகார் மனுவை பெற்றுக்கொண்டு அதைப் படிக்காமலே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து விவசாயி சுமித் குமார் கூறுகையில், தனது கிராமத்தில் நிலவும் வறட்சியால் மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதனை உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லவே இப்பயொரு புகார் மனுவை அளித்தேன் என்று தெரிவித்தார்.

தனது கிராமத்தில் ஏற்படும் வறட்சிக்கு இந்திர கடவுள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் அளித்துள்ள புகார் உ.பி.யில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com