உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: 4 வாரத்தில் என்டிஏ குழு அறிக்கை தாக்கல்

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உண்மை கண்டறியும் குழு விசாரணை

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் ஆயூரில் கடந்த ஜூலை 17-இல் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்ல அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. தோ்வெழுத வரும் மாணவா்களிடம் சோதனையிடும் பணியை மேற்கொள்வதற்காக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஒரு ஏஜென்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்தப் பணிக்காக அமா்த்தப்பட்டிருந்தவா்கள் இவ்வாறு அறிவுறுத்தியதாகப் புகாா் எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ), இது வெறும் கட்டுக்கதை என்றும், தவறான நோக்கத்துடன் இதுபோன்ற புகாா்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தது. தொடா்ந்து, இதன் மீது விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை என்டிஏ நியமித்தது.

அந்தக் குழுவில் மூத்த என்டிஏ இயக்குநா் சாதனா பராசா், ஆலப்புரா சரஸ்வதி வித்யாலயா பள்ளி முதல்வா் ஷைலஜா, பிரகதி அகாதெமியை சோ்ந்த சுசித்ரா ஷைஜிந்த் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து இதில் தொடா்புடைய நபா்களைச் சந்தித்து, குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வா் என்றும், 4 வாரத்தில் ஆய்வறிக்கையை தேசிய தோ்வுகள் முகமையிடம் சமா்ப்பிப்பா் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும் தடை செய்யப்பட்ட பொருள்கள், ஆடைக் கட்டுப்பாடு, தோ்வு மைய வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்றும் அந்தக் குழுவினா் கேட்டறிவா் என அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்னதாக 5 பெண் பணியாளா்களை கேரள போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com