200 கோடியை எட்டிய கரோனா தடுப்பூசி: சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை நாட்டில் 200 கோடியை எட்டியதையடுத்து, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் பாராட்டி
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை நாட்டில் 200 கோடியை எட்டியதையடுத்து, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
 அந்தக் கடிதத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
 கரோனா பெருந்தொற்றுப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக வரும் தலைமுறைகள் நமது சாதனைகளைப் பாராட்டும். மக்களின் உயிர்களைக் காப்பது மிக முக்கியமானதாகும். குறிப்பாக, நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த உலகளாவிய தொற்றுநோய்ப் பரவலில் இருந்து மக்களைக் காப்பது மிக முக்கியமானதாக இருந்தது.
 நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் தடுப்பூசி செலுத்தும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துணைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
 எப்போது அதிக கடமையாற்ற வேண்டியுள்ளதோ அப்போது அர்ப்பணிப்புடன் கடமைகளைச் செய்வது பாராட்டத்தக்க முன்னுதாரணமாகும். பனி படர்ந்த மலைகள் முதல் வெப்பமான பாலைவனம் வரையிலும், தொலைதூர கிராமம் முதல் அடர்ந்த வனப் பகுதி வரையிலும் எவரும் விடுபடாமல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடைக்கோடியிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை இப் புதிய இந்தியா சிறப்பாகச் செய்துள்ளதையே இது காட்டுகிறது.
 உலகில் மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இந்தியா நிறைவேற்றிய அளவும் வேகமும் பிரமிக்க வைக்கிறது. உங்களைப் போன்றவர்களால்தான் இந்த விஷயம் சாத்தியமானது.
 இந்த வரலாற்றுத் தருணத்தில் தடுப்பூசிப் பணிகளுக்கு உங்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். இதுபோன்ற முக்கிய உயிர் காக்கும் பணிகளில் நீங்கள் முன்னணியில் இருப்பதற்காக நான் பாராட்டுகிறேன்.
 நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டு சாதனை எட்டப்பட்டிருப்பது நமது நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையையும், சேவை மனப்பான்மையையும் காட்டுகிறது. நெருக்கடியான தருணத்தின்போது இந்தியப் பணியாளர்கள் உற்சாகத்துடன் மேற்கொண்ட பணிகளை வரும் தலைமுறைகள் பாராட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எனது வாழ்த்துகள் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 பிரதமர் நரேந்திர மோடி எழுதிய இக்கடிதத்தை கோவின் இணையதளத்திலிருந்தும், அதன் செயலியில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்வதோடு மற்றவர்களுக்கு பகிரவும் செய்யலாம்.
 நாட்டில் 98 சதவீதம் பேர் கரோனா முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றும், 90 சதவீதம் பேர் இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டனர் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 15 வயது முதல் 18 வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கியது. அவர்களில் 82 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 68 சதவீதம் பேர் இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டனர்.
 12 முதல் 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களில் 81 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 56 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com