மேக்கேதாட்டு அணை: வழக்கு விசாரணை ஜூலை 26-க்கு ஒத்திவைப்பு

மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசால் முன்மொழியப்பட்டுள்ள அணை கட்டுமானத் திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசால் முன்மொழியப்பட்டுள்ள அணை கட்டுமானத் திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்க ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 26-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
 கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
 இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஜூன் 7-ஆம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், "இந்த விவகாரம் நீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து ஆணையம் விவாதிக்க முடியாது. ஆகவே, இதுகுறித்து விவாதிக்க ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 தமிழக அரசு எழுப்பிய பிரச்னைகளையொட்டி, ஜூன் 17 -இல் கூட்டப்பட்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஜூன் 23-ஆம் தேதி, ஜூலை 6-ஆம் தேதி உள்பட மொத்தம் 3 முறை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் டி.குமணனுடன் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, "காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவு, அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் 16. 2. 2018- இல் பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றை செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் நீர் ஆதாரத்தைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம், தமிழகத்துக்கு நீர்ப்பங்கிட்டை அளவிடும் பிலிகுண்டுலுக்கு மேலே மேக்கேதாட்டு பகுதியில் அணைக்கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது. இது தமிழகத்துக்கு வழங்கும் நீர்ப்பங்கீட்டை பாதிக்கும். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். இதுகுறித்து விவாதிக்க, திட்டம் குறித்து ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு சட்டவிதிகள்படி அதிகார வரம்பு கிடையாது. மேலும், இது தமிழகத்துக்கு மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாகும், ஆகவே வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கவும் அனுமதி தரக்கூடாது. இந்த வழக்கு விவகாரத்தை விசாரித்த பிறகு கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
 அப்போது கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், "உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவில் இந்த அணை கட்டும் திட்டத்தால் எவ்விதப் பாதிப்பும் தமிழகத்துக்கு ஏற்படாது. கர்நாடக மாநிலத்தின் பகுதியில் குடிநீருக்காகவும் மின் சக்தி திட்டத்துக்காகவும் அணை கட்டுவதற்கான உரிமை கர்நாடகத்துக்கு உள்ளது. அதுகுறித்து காவிரி நீர் ஆணைய கூட்டத்திலும் விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது' என்று வாதிட்டார்.
 அப்போது நீதிபதிகள் அமர்வு, "காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதுகுறித்து கலந்துரையாடலாம். ஆனால், அந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எதும் முடிவு எடுக்கப்படுமானால் அது இந்த மனு மீதான முடிவுக்கு உள்பட்டதாக இருக்கும்' என்று தெரிவித்தது.
 இதைத் தொடர்ந்து முகுல் ரோத்தகி வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் ஆணைய கூட்டத்தில் விவாதிக்க அதிகார வரம்பு இல்லை. இந்த முழு விவகாரமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் முயற்சியாகும்' என்றார்.
 அப்போது, ஷியாம் திவான், "இதுதொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட கூட்டத்தை தள்ளிப்போட ஆணையத்திடம் கேட்கப்படும்' என்றார்.
 இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்கும் வகையில், பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை ஜூலை 26-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 மற்றொரு மனுதாரர் பி.ஆர் பாண்டியன் தரப்பில் வழக்குரைஞர் எம்.பி. பார்த்திபன் ஆஜரானார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com