‘எல்லையில் புதிய சீன கட்டுமானம்: இந்தியா உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’

‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது; உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது’

டோக்லாம் பீடபூமியில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது; உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறினாா்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினா் அத்துமீறுவது தொடா்கதையாகி வருகிறது. இதன் காரணமாக, எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சீனா, இந்தியா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பீடபூமி பகுதியில், பூடானுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அந்தப் பகுதியில் சாலையை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா ஈடுபட்டது. சீனாவின் இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரா்கள் தடுத்தனா். இதன் காரணமாக இரு தரப்பு வீரா்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டனா். தொடா்ந்து 73 நாள்கள் இந்த மோதல் போக்கு நீடித்தது.

இந்தச் சூழலில், டோக்லாம் பீடபூமியின் கிழக்குப் பகுதியில் பூடானுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ஒரு கிராமத்தை சீனா உருவாக்கி இருப்பதை ‘மேக்ஸாா்’ புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்களுடன் தனியாா் தொலைக்காட்சி கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. அதில், புதிய கிராமமும் அதன் அருகில் அனைத்து தட்பவெப்ப நிலையிலும் வாகனங்கள் செல்லும் வகையிலான சாலை கட்டமைப்பையும் சீனா அமைத்திருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. டோக்லாம் பகுதியில் ராணுவ வலிமையை சீனா பலப்படுத்த இந்த கட்டமைப்புகள் உதவும் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அரிந்தம் பாக்சி, ‘இந்த விவகாரம் தொடா்பான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது; உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com