புந்தேல்கண்ட் சாலை சேதம்: பிரதமர் மோடி திறந்துவைத்த சாலைக்கே இந்த நிலையா?

உத்தரப்பிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் திறந்து வைத்த புத்தம் புதிய எக்ஸ்பிரஸ்வே சாலை சில இடங்களில் சேதமடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புந்தேல்கண்ட் சாலை சேதம்
புந்தேல்கண்ட் சாலை சேதம்


கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் திறந்து வைத்த புத்தம் புதிய எக்ஸ்பிரஸ்வே சாலை சில இடங்களில் சேதமடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலௌன் மாவட்டத்தில் வியாழனன்று சாலை சேதமடைந்திருந்தநிலையில், வெள்ளிக்கிழமை சாலையின் உலோகத் தடுப்பு வேலி சேதமடைந்திருக்கிறது.

இது குறித்து சாலை போட்ட நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சாலையை செப்பனிடும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசத்தில் சுமாா் ரூ.14,850 கோடி செலவில் 296 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் மோடி ஜூலை 16ஆம் தேதிதான் திறந்துவைத்தாா். ஜலானில் இதற்காக மிகப் பிரமாண்டமான திறப்பு விழாவும் நடைபெற்றது.

புந்தேல்கண்ட் விரைவுச் சாலையால், சித்ரகூட் மற்றும் தில்லி இடையிலான பயண நேரம் 3 முதல் 4 மணி நேரம் வரை குறையும். இந்தச் சாலையானது வாகனங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த புந்தேல்கண்ட் பகுதியின் வளா்ச்சிக்கும் வேகமளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில், சாலை திறக்கப்பட்டு வெறும் 5 நாள்களில் குத்ரெயில் முதல் சித்ரகூடம் செல்லும் பகுதியில் சாலை பலத்த சேதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜலானில் பெய்த கனமழை காரணமாக சாலையில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக செப்பனிடும் பணி நடைபெற்றதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

இதுபோலவே, ஔரியா பகுதியிலும் சாலையின் ஒரு பகுதி கனமழையால் அடித்துச் செல்லப்பட்டு சேதம் ஏற்பட்டதாகவும், உடனடியாக செப்பனிடும் பணிகள் நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கனமழை பெய்து, தாழ்வானப் பகுதிக்கு மேடான பகுதியிலிருந்து தண்ணீர் பாய்ந்தோடியபோது, மண் அரிப்பினால் சாலையும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, சாலை திறக்கப்பட்டு ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை சாலையின் பக்கவாட்டு பாதுகாப்பு உலோக வேலி போன்ற அமைப்பும் பலத்த சேதமடைந்திருப்பதாகவும் கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, புதைக்கப்பட்டிருந்த உலோக வேலி சரிந்ததாகவும், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

போர்க்கால அடிப்படையில் சாலை மற்றும் சாலைத் தடுப்புகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

2020-இல் அடிக்கல்

உத்தர பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் புந்தேல்கண்ட் விரைவுச் சாலைக்கு கடந்த 2020, பிப்ரவரி 29-இல் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். 28 மாதங்களிலேயே பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நான்குவழிச் சாலையால் சித்ரகூட்டிலிருந்து தில்லிக்கு 6 மணி நேரத்தில் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரு சில நாள்களிலேயே எக்ஸ்பிரஸ் வே சாலை பழுதடைந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com