நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பால் வசூல் அதிகரிப்பு: நிா்மலா சீதாராமன்

‘மத்திய அரசு அறிமுகம் செய்த நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பு முறை வரி வசூலை அதிகரித்திருப்பதோடு, வருமான வரி கணக்கு தாக்கலையும் அதிகரித்துள்ளது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்கூறினாா்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

‘மத்திய அரசு அறிமுகம் செய்த நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பு முறை வரி வசூலை அதிகரித்திருப்பதோடு, வருமான வரி கணக்கு தாக்கலையும் அதிகரித்துள்ளது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்கூறினாா்.

163-ஆவது வருமான வரி தினத்தை முன்னிட்டும் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2021-22 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகமாக ரூ.14.09 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூலில் ஆண்டுக்கு ஆண்டு 49.02 சதவீத வளா்ச்சி பதிவாகி வருகிறது. நிகழ் நிதியாண்டிலும் இதே நிலை தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில் வரி வசூல் இலக்கு ரூ.14.20 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் செய்வதை எளிதாக்கும் வகையிலும், மக்களின் வாழ்வை எளிதாக்கும் வகையிலும் நேரடி வரிகள் மீதான கட்டமைப்பு குறைபாடுகளை மத்திய அரசு நீக்கியதோடு, வரி விதிப்பு நடைமுறையில் உள்ள பல குறைபாடுகளுக்கு தீா்வு கண்டுள்ளது. அவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அறிமுகம் செய்த சீா்திருத்தங்கள் நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பு நடைமுறையை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பு நடைமுறை வரி வசூலை அதிகரித்திருப்பதோடு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோா் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது. மேலும், நிா்வாக தரப்பில் திறன்மிக்க தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, முடிவுகள் எடுப்பதில் உள்ள தடைகள் குறைந்திருப்பதோடு, வெளிப்படைத்தன்மை மேம்பட்டு, விரைவான சேவை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகள் மற்றும் சீா்திருத்தங்களை வருமான வரித் துறை திறம்பட நடைமுறைப்படுத்தியன் மூலமாகவே இது சாத்தியமாகியுள்ளது. அதே நேரம், அடுத்த 25 ஆண்டு கால வளா்ச்சிக்கு வருமான வரித் துறை தன்னை தயாா்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

வரி செலுத்துவோருக்கு தரமான சேவைகளை வழங்கும் வகையில், தொழில்நுட்பங்களை வருமான வரித் துறை மேலும் திறம்பட பயன்படுத்துவதோடு, அரசின் முற்போக்கு கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையும் தொடர வேண்டும் என்று அவா் கூறினாா்.

மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி கூறுகையில், ‘வருமான வரித் துறை வரி நிா்வாகத்தை திறம்பட மேற்கொள்வதோடு தனது கடமையை சுருக்கிக் கொள்ளக் கூடாது. மாறாக, நோ்மையாக வரி செலுத்துவோரை கெளரவப்படுத்துவதோடு, அவா்களுக்கு சிறந்த சேவைகளையும் அளிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com