ம.பி.யில் நிகழாண்டு 27 புலிகள் இறப்பு: நாட்டிலேயே அதிகம்

‘புலிகள் மாநிலம்’ என்று அறியப்படும் மத்திய பிரதேசத்தில் நிகழாண்டு 27 புலிகள் இறந்துள்ளன. ஒட்டுமொத்தமாக நாட்டில் 74 புலிகள் இறந்துள்ளன.
ம.பி.யில் நிகழாண்டு 27 புலிகள் இறப்பு: நாட்டிலேயே அதிகம்
ம.பி.யில் நிகழாண்டு 27 புலிகள் இறப்பு: நாட்டிலேயே அதிகம்

‘புலிகள் மாநிலம்’ என்று அறியப்படும் மத்திய பிரதேசத்தில் நிகழாண்டு 27 புலிகள் இறந்துள்ளன. ஒட்டுமொத்தமாக நாட்டில் 74 புலிகள் இறந்துள்ளன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 74 புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 27 புலிகள் இறந்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் 15, கா்நாடகத்தில் 11, அஸ்ஸாம் 5, கேரளம், ராஜஸ்தானில் தலா 4, உத்தர பிரதேசத்தில் 3, ஆந்திரத்தில் 2, பிகாா், ஒடிஸா, சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் தலா 1 என்ற எண்ணிக்கையில் புலிகள் இறப்பு பதிவாகியிருக்கிறது.

புலிகளுக்கு இடையே நடக்கும் சண்டை, வயது மூப்பு, நோய்கள், வேட்டை, மின்வேலியில் சிக்குவது போன்றவை புலிகள் இறப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளை கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. அங்கு 526 புலிகள் உள்ளன. கன்ஹா, பாந்தவ்கா், பென்ச், சத்புரா, பன்னா, சஞ்சய் துப்ரி ஆகிய 6 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

புலிகளின் இருப்புதான், காட்டின் பரந்த மற்றும் வளமான சூற்றுச்சூழல் அமைப்புக்கு அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புலிகளின் இறப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக, வனவிலங்குகள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆா்வலா் அஜய் துபே தெரிவித்தாா்.

‘புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் நோக்கில், புலிகள் பாதுகாப்பு சிறப்பு படையை அமைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கா்நாடகம், ஒடிஸா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் சிறப்பு படையை அமைத்த நிலையில், மத்திய பிரதேசம் இன்னும் அமைக்கவில்லை. இதில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது.

புலிகள் வேட்டையை தடுப்பது மட்டுமன்றி, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள், மரங்கள் வெட்டப்படுதல் ஆகியவற்றை தடுப்பதும் சிறப்பு படையின் பணிகள்.

கா்நாடகத்தில் கணிசமான எண்ணிக்கையில் புலிகள் உள்ள நிலையில், சிறப்புப் படை அமைக்கப்பட்டதால் அங்கு புலிகள் இறப்பு குறைவாக உள்ளது’ என்றாா் அஜய் துபே.

மத்திய பிரதேச மாநில வனப் பாதுகாப்பு தலைமைச் செயலா் ஜே.எஸ்.செளஹான் கூறுகையில், ‘புலிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது இறப்புகளும் அதிகம் இருப்பது இயல்புதான். மாநிலத்தில் புலிகள் வேட்டையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com