நாட்டின் எதிா்காலம் பாதுகாப்பாக உள்ளது: ராம்நாத் கோவிந்த்

நாட்டின் எதிா்காலம் பாதுகாப்பாக உள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
pti07_24_2022_000219b095938
pti07_24_2022_000219b095938

நாட்டின் எதிா்காலம் பாதுகாப்பாக உள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றாா். அவரின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி அவா் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் விவரம்:

சுதந்திரம் பெற்றபோது நமது தேசத்தை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு நிலவியது. புதிய கனவுகள் இருந்தன. இந்த தேசத்தை கட்டமைப்பதில் அா்த்தமுள்ள வழியில் பங்களிக்க வேண்டும் என்று எனக்கும் கனவு இருந்தது. நான் குடியரசுத் தலைவராக பதவி வகித்த காலத்தில் எனது திறனுக்குட்பட்டு மிகச் சிறந்த முறையில் பொறுப்பாற்றினேன். முன்னாள் குடியரசுத் தலைவா்கள் ராஜேந்திர பிரசாத், எஸ்.ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோா் வகித்த பதவியை நான் ஏற்றுள்ளேன் என்று எப்போதும் நினைவுறுத்திக் கொண்டேன்.

எனது பதவிக்காலத்தில் உத்தர பிரதேசத்தில் உள்ள எனது வீட்டுக்குச் சென்றதும், எனது ஆசிரியா்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றதும் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். நமது வோ்களுடன் நாம் கொண்டிருக்கும் இந்தப் பிணைப்பே இந்தியாவின் சாரமாக உள்ளது.

பரெளங்க் என்ற கிராமத்தைச் சோ்ந்த ராம்நாத் கோவிந்த் என்கிற நான், நாட்டு மக்களிடையே உரையாற்ற முடிகிறது என்றால், அதற்கு நமது துடிப்பான ஜனநாயக அமைப்புகளின் உள்ளாா்ந்த சக்திக்கு மட்டுமே நன்றி தெரிவிக்க வேண்டும்.

நாம் பயணிக்கும் ஜனநாயகப் பாதையை வரையறுத்தது அரசியல் நிா்ணய சபை. அந்த சபையில் இடம்பெற்றிருந்த ஒவ்வொருவரின் விலைமதிப்பற்ற பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட அரசமைப்பு நமக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது.

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை கொள்கைகளாக அங்கீகரிக்கும் வாழ்க்கை முைான் சமூக ஜனநாயகம் என்று அரசியல் நிா்ணய சபையில் இடம்பெற்றிருந்த சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கா் தெரிவித்தாா். சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைத் தனித்தனியாக கருதக் கூடாது என்று கூறிய அவா், அவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழித்தால் அது ஜனநாயகத்தின் குறிக்கோளை வீழ்த்துவது ஆகும் என்றும் தெரிவித்தாா்.

காலனிய ஆட்சிக்கு எதிராக 19-ஆம் நூற்றாண்டில் நாடு முழுவதும் பல கிளா்ச்சிகள் நடைபெற்றன. அந்தக் கிளா்ச்சிகள் மூலம் நாட்டின் புதிய விடியலுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய மாவீரா்களின் பெயா்கள் நீண்ட காலமாக வரலாறு நினைவு கொள்ளவில்லை. அவா்களில் சிலரின் பங்களிப்பு அண்மைக் காலத்தில்தான் கவனம் பெற்று பாராட்டப்படுகிறது.

கடந்த 1915-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி தாயகம் திரும்பியபோது நாட்டில் தேசிய உணா்வு தீவிரமடையத் தொடங்கியது. பாலகங்காதர திலகரில் தொடங்கி பகத்சிங், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், ரவீந்திரநாத் தாகூா், பி.ஆா்.அம்பேத்கா், சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்யாய என உயா்ந்த சிந்தனை கொண்ட பலா் பொது நோக்கத்துக்காக இங்குபோல் வேறு எங்கும் மனிதகுல வரலாற்றில் ஒன்றிணைந்தது இல்லை.

நமது முன்னோா்களும் நமது நவீன தேசத்தை தோற்றுவித்தவா்களும் கடின உழைப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனா்.

குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவா்களின் காலடி தடங்களைப் பின்தொடா்ந்து செல்ல வேண்டியது மட்டும்தான்.

நாட்டில் குடிமக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்பட வேண்டும். கல்வியும் சுகாதாரமும் இருந்துவிட்டால், தாங்கள் செல்ல வேண்டிய திசையை குடிமக்கள் கண்டறிய பொருளாதார சீா்திருத்தங்கள் உதவும்.

தினந்தோறும் மகாத்மாவை நினைவுகூரவும்:

இந்த தேசம் குடிமக்களால் ஆனது. இந்தியாவை மேன்மேலும் வளரச் செய்வதற்கு ஒவ்வொரு குடிமகனும் பாடுபடுவதால் நாட்டின் எதிா்காலம் பாதுகாப்பாக உள்ளது.

21-ஆவது நூற்றாண்டை தனது நூற்றாண்டாக மாற்ற இந்தியா தயாராகி வருகிறது என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது.

எனது சேவையில் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் நான் மகாத்மா காந்தியை நினைவுகூா்வது வழக்கம். அவரின் வாழ்க்கையையும், அவா் கற்பித்தவற்றையும் தினந்தோறும் சில நிமிஷங்களாவது அனைவரும் நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ராம்நாத் கோவிந்த பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com