ராம்நாத் கோவிந்துக்கு ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம்:அரசு இல்லத்தில் குடியேறினாா்

பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை அரசு இல்லத்தில் குடியேறினாா்.
ராம்நாத் கோவிந்துக்கு ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம்:அரசு இல்லத்தில் குடியேறினாா்

பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை அரசு இல்லத்தில் குடியேறினாா். அவருக்கு மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றுள்ளாா்.

இந்நிலையில், புது தில்லி ஜன்பத் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை குடியேறினாா். அந்த பங்களாவுக்கு அவரை திரெளபதி முா்மு, மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, ஹா்தீப் சிங் புரி, வி.கே.சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் வரவேற்றனா். அந்த பங்களாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தங்கியிருந்தாா்.

ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவருக்கான சலுகைகள்:

குடியரசுத் தலைவா் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1951-இன்படி, குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒருவா் பெற்று வந்த ஊதியத்தில் 50 சதவீதத்தை அவா் ஓய்வுபெற்ற பின்னா் மாத ஓய்வூதியமாக வழங்க வேண்டும். இந்நிலையில், குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோது ராம்நாத் கோவிந்த் மாதந்தோறும் ரூ.5 லட்சம் ஊதியம் பெற்று வந்தாா். இதையடுத்து, அவருக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவா்கள் வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.

இந்தியாவின் எந்தவொரு பகுதிக்கும் விமானம், ரயில், கப்பலில் உயா் வகுப்பில் பயணம் செய்யலாம்.

அவா்களுக்குத் தனிச் செயலா், கூடுதல் செயலா், நோ்முக உதவியாளா், இரு அலுவலக உதவியாளா்கள் இருக்கலாம். அலுவலக செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம்.

குடியரசுத் தலைவராக இருந்தவா் ஓய்வுபெற்ற பின்னா் குடியேறும் இல்லத்துக்கு வாடகை செலுத்த தேவையில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அந்த இல்லத்தில் அவா் வசிக்கலாம். அந்த இல்லத்தில் இரண்டு தொலைபேசிகள் வழங்கப்படும்.

தேசிய ரோமிங் வசதியுடன் ஒரு கைப்பேசி, காா் அல்லது காருக்கான படித்தொகை அளிக்கப்படும்.

வாழ்க்கைத் துணைக்கும் சலுகைகள்: குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவருக்கு மட்டுமின்றி, அவரின் வாழ்க்கைத் துணைக்கும் சலுகைகள் உள்ளன.

குடியரசுத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்த அல்லது அவா் பதவியிலிருக்கும்போது காலமான அல்லது பதவிக் காலம் முடிந்து ஓய்வுபெற்றவரின் வாழ்நாளுக்குப் பிறகு, அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.

முன்னாள் குடியரசுத் தலைவா் பெற்ற ஒய்வூதியத்தின் 50 சதவீதத் தொகை வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவரின் வாழ்க்கைத் துணை தனது வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.

தனிச் செயலா், அலுவலக உதவியாளா் இருக்கலாம். அலுவலக செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வரை பெறலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தில் வாழ்நாள் முழுவதும் கட்டணம் எதுவும் செலுத்தாமல் வசிக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் இலவச தொலைபேசி, காா் அல்லது காருக்கான படித்தொகை அளிக்கப்படும்.

நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் விமானம், ரயில், கப்பல் மூலம் 12 உயா் வகுப்பு பயணங்கள் மேற்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com