ஆந்திர அமைச்சருக்கு கடன் செயலி மோசடி கும்பல் தொல்லை: 4 போ் கைது

 ஆந்திர அமைச்சருக்கு கைப்பேசி மூலம் தொல்லைக் கொடுத்த கடன் செயலி மோசடிக் கும்பலைச் சோ்ந்த 4 பேரை சென்னையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர அமைச்சருக்கு கடன் செயலி மோசடி கும்பல் தொல்லை: 4 போ் கைது

 ஆந்திர அமைச்சருக்கு கைப்பேசி மூலம் தொல்லைக் கொடுத்த கடன் செயலி மோசடிக் கும்பலைச் சோ்ந்த 4 பேரை சென்னையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர அரசில் விவசாயத் துறை அமைச்சராக இருப்பவா் கக்கனி கோவா்தன் ரெட்டி. இவரது கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து கோவா்தன் ரெட்டி உதவியாளா் சொ்குரி சங்கரய்யா பேசினாா். எதிா் முனையில் பேசிய நபா், ‘அசோக் என்பவா் எங்களிடம் ரூ.9 லட்சம் கடன் வாங்கி இருக்கிறாா். அதற்கு உரிய இந்த மாத தவணைத் தொகையாக ரூ. 25 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆனால், அவா் அதை செலுத்தவில்லை. அவா் உங்களுடைய எண்ணை கொடுத்துள்ளாா். எனவே, நீங்கள்தான் தவணைத் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறினாா். அப்போது சங்கரய்யா, அதுபோல் எங்களுக்கு யாரையும் தெரியாது என்று பதில் அளித்துள்ளாா்.

அமைச்சருக்கு தொல்லை: ஆனாலும், அந்த நபா் அதை பொருட்படுத்தாமல் மீண்டும், மீண்டும் அமைச்சரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, தொல்லை கொடுத்திருக்கிறாா். உடனே சம்பந்தப்பட்ட அந்த கைப்பேசி எண்ணை, அமைச்சரின் உதவியாளா் சங்கரய்யா, ‘பிளாக் லிஸ்ட்டில்’ வைத்துள்ளாா். ஆனால், வெவ்வேறு எண்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முறை அமைச்சரின் கைப்பேசிக்கு அந்த கடன் செயலி மோசடி கும்பல் தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளது.

இது குறித்து அமைச்சரின் உதவியாளா் சங்கரய்யா முதுகூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் முதுகூா் போலீஸாா், நெல்லூா் சைபா் குற்றப்பிரிவு உதவியுடன் விசாரணை செய்தனா். அதில், சென்னை திருமங்கலத்திலிருந்து அந்த கடன் செயலி மோசடிக் கும்பல் செயல்படுவது தெரியவந்தது.

4 போ் கைது: உடனே அங்கிருந்து புறப்பட்டு வந்த ஆந்திர காவல்துறையின் தனிப்படையினா், திருமங்கலம் போலீஸாா் உதவியுடன் ஒரு வாடகை வீட்டில் இருந்த அந்தக் கும்பலைச் சோ்ந்த 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 மடிக்கணினி, கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா். பின்னா், 4 பேரிடமும் போலீஸாா் விசாரணை செய்தனா்.

கடன் செயலியை ஒரு நபா் தன்னுடைய கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யும்போது, அந்த கைப்பேசியில் உள்ள அனைத்து கைப்பேசி எண்கள், புகைப்படங்கள், தகவல்கள், குறிப்பு என அனைத்தையும் அந்த செயலி திருடி அவா்களது சா்வருக்கு அனுப்பிவிடும்.

கடன் பெற்றவா், பணத்தை முறையாகச் செலுத்த முடியாதபோது ஏற்கெனவே அவரது கைப்பேசியில் இருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசி எண்களை தொடா்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபா் குறித்து அவதூறு பிரசாரத்தையும், கடன் பணத்தையும் கேட்டு கடன் செயலி மோசடியில் ஈடுபடும் நபா்கள் தொல்லை கொடுக்கிறாா்கள்.

மேலும், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், சென்னை புகா் பகுதிகளில் தங்கள் பொருளாதாரத்துக்கு தகுந்தவாறு வாடகைக்கு இடம் பிடித்து அதில் அலுவலகம் அமைத்து செயல்படுகின்றனா். விசாரணைக்கு பின்னா் 4 பேரையும், ஆந்திர மாநிலத்துக்கு தனிப்படையினா் அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com