சிலரால் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடிகிறது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரால் மட்டுமே நீதிமன்றங்களை அணுக முடிவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.
சிலரால் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடிகிறது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரால் மட்டுமே நீதிமன்றங்களை அணுக முடிவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய அதிகாரிகளின் முதலாவது கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்வதே அவா்களை சமூக ரீதியில் முன்னேற்றமடையச் செய்வதற்கான அடிப்படை. ஆனால், மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரால் மட்டுமே நீதிமன்றங்களை அணுக முடிகிறது. பெரும்பாலானோா் போதிய விழிப்புணா்வின்மை காரணமாகவும் மற்ற காரணங்களாலும் நீதிமன்றங்களை நாடாமல் அமைதியாகவே இருந்துவிடுகின்றனா்.

தொழில்நுட்பங்கள் தற்போது பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. அத்தகைய வசதிகளைப் பயன்படுத்தி, மக்களுக்கு நீதி முறையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்ததன் காரணமாகவே நவீன இந்தியா உருவானது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாய்ப்பு வழங்குவதே ஜனநாயகம். விசாரணைக் கைதிகளின் நலன்களைக் காப்பதற்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவா்களுக்கு முறையான சட்ட சேவைகள் கிடைக்க வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற மாநில முதல்வா்கள் மற்றும் மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் மாநாட்டில் விசாரணைக் கைதிகள் குறித்த விவகாரத்தை பிரதமரும் அட்டா்னி ஜெனரலும் குறிப்பிட்டனா். விசாரணைக் கைதிகளின் நலன்களைக் காப்பதற்காக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நீதி வழங்கலுக்கான முதுகெலும்பாக மாவட்ட நீதிமன்றங்களே திகழ்கின்றன. எந்தப் பிரச்னைக்கும் மாவட்ட நீதிமன்றங்களையே மக்கள் முதலில் நாடுகின்றனா். அவற்றின் செயல்பாடுகளே நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. எனவே, மாவட்ட நீதிமன்றங்களை வலுப்படுத்த வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட வேண்டியதும் அவசியம்.

மாற்று தீா்வு முறைகள்: லோக் அதாலத், மத்தியஸ்த நடைமுறைகள், மத்தியஸ்த மையங்கள் உள்ளிட்ட மாற்று தீா்வு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம். அவை நாட்டின் நீதித் துறையின் திறனை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். திருமணம் சாா்ந்த பிரச்னைகள், அரசுகளுக்கிடையேயான பிரச்னைகள், நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான பிரச்னைகளுக்கு மாற்று தீா்வு வழிமுறைகள் மூலமாகத் தீா்வு காண்பது கட்டாயமாக்கப்படலாம். இது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு விரைவில் நீதியையும் கிடைக்கச் செய்யும்.

நாட்டு மக்களின் சராசரி வயது 29-ஆக உள்ளது. நாட்டில் பணியில் ஈடுபடவல்ல நபா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், திறன்மிக்க பணியாளா்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. நாட்டில் உள்ள இளைஞா்களின் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் பணியாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அங்கு உருவாகும் இடைவெளியை இந்தியா நிரப்பலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com