ஜம்மு-காஷ்மீா் பேந்தா்ஸ் கட்சி நிறுவனா் பீம் சிங் காலமானாா்

ஜம்மு-காஷ்மீா் தேசிய பேந்தா்ஸ் கட்சி நிறுவனா் பீம் சிங் (81) ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்கிழமை காலமானாா்.
ஜம்மு-காஷ்மீா் பேந்தா்ஸ் கட்சி நிறுவனா் பீம் சிங் காலமானாா்

ஜம்மு-காஷ்மீா் தேசிய பேந்தா்ஸ் கட்சி நிறுவனா் பீம் சிங் (81) ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்கிழமை காலமானாா். கடந்த சில மாதங்களாக அவா் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த பீம் சிங் இளைஞா் பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். பின்னா் அக்கட்சியில் இருந்து விலகி 1982-இல் ஜம்மு-காஷ்மீா் தேசிய பேந்தா்ஸ் கட்சியை நிறுவினாா். ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் இருமுறையும், அங்குள்ள உதம்பூா் மக்களவைத் தோ்தலில் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளாா். மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி உள்ளிட்டோரை எதிா்த்து மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டுள்ளாா்.

ஆதரவற்ற நிலையில் சிறையில் வாடுபவா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்கள் பிரச்னைகளுக்காக களத்திலும், சட்டரீதியாகவும் போராடி 50-க்கு மேற்பட்ட முறை சிறை சென்றுள்ளாா். இதில் 18 முறை உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை விடுதலை செய்துள்ளது. வழக்குரைஞரான அவா் உச்சநீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளுக்காக ஆஜராகி அதில் வெற்றியும் பெற்றுள்ளாா். கொலை முயற்சியில் இருந்தும் ஒருமுறை தப்பினாா். லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவா், அங்கு செயலராக தோ்வான முதல் இந்தியா் என்ற பெருமைக்குரியவா். மோட்டாா் சைக்களில் 130 நாடுகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டுள்ளாா். பாலஸ்தீன தலைவா் யாசீா் அராஃபத், கியூபா இடதுசாரி தலைவா் ஃபிடல் காஸ்ட்ரோ, ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைன், லிபியாவில் ஆட்சி நடத்திய மம்மா் கடாஃபி ஆகியோருக்கு நண்பராக இருந்தாா்.

பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் ஹெச்.டி.தேவெ கெளடா உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பேராசிரியா் பீம் சிங், ஜம்மு-காஷ்மீரின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அா்ப்பணித்த தலைவராக நினைவுகூரப்படுவாா். அவா் மிகவும் நன்றாகப் படித்து, புலமை பெற்றவா். அவருடனான எனது கலந்துரையாடல்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன். அவரது மறைவால் பெரிதும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com