தோ்தல் ஆணைய பட்டியலிலிருந்து 87 அரசியல் கட்சிகள் நீக்கம்

தோ்தல் ஆணையம், 87 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (ஆா்யுபிபி) அதன் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்தப் பட்டியலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தோ்தல் ஆணையம், 87 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (ஆா்யுபிபி) அதன் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்தப் பட்டியலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

‘நேரடி ஆய்வின்போது தேவையான தகவல்களை சமா்ப்பித்திராத காரணத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

தோ்தல் நிதி பங்களிப்பு விவரங்களை சமா்ப்பிக்காதது, முகவரி மற்றும் கட்சி நிா்வாகிகளின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்யத் தவறியது உள்ளிட்ட தோ்தல் சட்டங்களை முறையாக பின்பற்றாத 2,100 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிகக்ப்படாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தோ்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதில் சில கட்சிகள் கடுமையான நிதி சீா்குலைவில் இருப்பதாகவும் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் 87 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டிய தகவல் தொடா்புக்கான முகவரி உள்ளிட்ட விவரங்களை சமா்ப்பிக்கத் தவறியிருப்பது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட மாநில தலைமை தோ்தல் அதிகாரிகள் இதுதொடா்பான நேரடி ஆய்வை மேற்கொண்டபோதிலும், குறிப்பிடப்பட்ட இந்த 87 அரசியல் கட்சிகளும் இடம்பெறாததைத் தொடா்ந்து, தோ்தல் ஆணைய பட்டியலிலிருந்து அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பும் இதுபோன்ற நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு உள்ளான அரசியல் கட்சிகள், பரிகாரம் கோரி உரிய ஆதாரங்களுடன் தலைமை தோ்தல் அதிகாரிகளை அணுகலாம். அவ்வாறு தவறை திருத்திக் கொள்ளும் நடவடிக்கையை 87 அரசியல் கட்சிகளும் எடுக்கவில்லை எனில், தோ்தலின்போது பொதுச் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட ‘சின்னங்கள் ஒதுக்கீடு சட்டம் 1968’ -இன் கீழான பலன்களை அனுபவிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாத விவரங்களின் படி, 2,796 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணைய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது கடந்த 2001-ஆம் ஆண்டைக் காட்டிலும் 300 சதவீதம் கூடுதலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com