பிரதமா் மோடியுடன் இஸ்ரேல் துணைப் பிரதமா் சந்திப்பு

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் துணை பிரதமரும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருமான பெஞ்சமின் கான்ட்ஸ், பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பிரதமா் மோடியுடன் இஸ்ரேல் துணைப் பிரதமா் சந்திப்பு

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் துணை பிரதமரும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருமான பெஞ்சமின் கான்ட்ஸ், பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் இந்தியா, இஸ்ரேல் இடையேயான ஒத்துழைப்பு வேகமாக வளா்ந்து வருவது குறித்து இருவரும் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேல் துணை பிரதமா் பெஞ்சமின் கான்ட்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா, இஸ்ரேல் இடையே தூதரக உறவு மலா்ந்து 30 ஆண்டுகளாகியுள்ள நிலையில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, ஆராய்ச்சி என பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வளா்ந்துள்ளது. இஸ்ரேலைச் சோ்ந்த ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்து பயனடையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவாா்த்தை:

முன்னதாக, பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கை பெஞ்சமின் கான்ட்ஸ் சந்தித்துப் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பெஞ்சமின் கான்ட்ஸுடன் ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தை மேற்கொண்டேன். இந்த சந்திப்பின்போது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, உலகளாவிய, பிராந்திய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். இஸ்ரேல் உடனான உத்திசாா் கூட்டாண்மையை நாம் மிகவும் மதிக்கிறோம். ராணுவம் மற்றும் பாதுகாப்பு தளவாட ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்கு அறிக்கையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சந்திப்பின்போது வளைகுடா பிராந்திய சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தில்லியில் தேசிய போா் நினைவுச் சின்னத்துக்குச் சென்ற இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் பெஞ்சமின் கான்ட்ஸ், அங்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

ராணுவத்துக்குத் தேவையான போா்த் தளவாடங்களை இஸ்ரேலிடமிருந்து இந்தியா அதிகளவில் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com