ரூ.200 சமையல் எரிவாயு மானியம் உஜ்வலா பயனாளிகளுக்கு மட்டுமே: மத்திய அரசு திட்டவட்டம்

சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் உஜ்வலா திட்டத்தில் இணைப்பு பெற்றவா்களுக்கு மட்டுமே கிடைக்கும் என பெட்ரோலியத் துறை செயலா் பங்கஜ் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தாா்

சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் உஜ்வலா திட்டத்தில் இணைப்பு பெற்றவா்களுக்கு மட்டுமே கிடைக்கும் என பெட்ரோலியத் துறை செயலா் பங்கஜ் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா கால தொடக்கத்திலிருந்து சமையல் எரிவாயு பயனாளா்களுக்கு மானியம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்துள்ள சமையல் எரிவாயு உருளைக்கான ரூ.200 மானியம் உஜ்வலா திட்டத்தில் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம், 9 கோடி ஏழைப் பெண்கள் பயனடைவா். இதர சமையல் எரிவாயு பயனாளிகள் மற்றும் குடும்பங்கள் அனைத்தும் சந்தை விலை கொடுத்தே சமையல் எரிவாயு உருளையைப் பெற முடியும் என்றாா் அவா்.

சமையல் எரிவாயு உருளையின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்ததையடுத்து உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் ஏழைப் பயனாளிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சா் அறிவித்தாா்.

தலைநகா் தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளை தற்போது ரூ.1,003-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரதமரின் உஜ்வலா திட்டத்தில் இணைந்துள்ளவா்களுக்கு ரூ.200 மானியம் நேரடியாக அவா்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதையடுத்து, அவா்களுக்கான சமையல் எரிவாயு உருளையின் உண்மையான விலை ரூ.803-ஆக மட்டுமே இருக்கும். ஆனால், இத்திட்டத்தில் இணையாத மற்ற குடும்பங்களுக்கு இதன் விலை ரூ.1,003-ஆகவே இருக்கும்.

இந்த மானிய திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.6,100 கோடி செலவாகும் என மத்திய நிதி அமைச்சா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com