மாநில கல்விக் கொள்கை: நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைப்பு

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கு தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 13 வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கு தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 13 வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு தொடா்ந்து எதிா்த்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக்கொள்கை ஒன்று உருவாக்கப்படும். அதற்காக குழு அமைப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 போ் கொண்ட குழுவை அமைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

உறுப்பினா்கள் விவரம்: இந்தக் குழுவில் சவீதா கல்வி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் எல்.ஜவஹா் நேசன், கணிதப் பேராசிரியா் ராமானுஜம், மாநில வளா்ச்சி கொள்கைக் குழு உறுப்பினா்கள் பேராசிரியா் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியா் ராம.சீனுவாசன், யுனிசெஃப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலா் அருணா ரத்னம், எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த், கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளா் துளசிதாசன், கல்வியியல் எழுத்தாளா் முனைவா் எஸ்.மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். குழுவின் உறுப்பினா் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநா் செயல்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிா்கால குறிக்கோளுக்கு ஏற்ப மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கையை வகுக்க மாணவா்கள், கல்வியாளா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள் என்று பலதரப்பட்டோரிடம் கருத்துக்களைப் பெற வேண்டும்.

தமிழக இளைஞா்களின் எதிா்காலம், உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். சமத்துவமான கல்வியைத் தரும் வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். தோ்வு முறைகளில் சீா்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், பள்ளிப் படிப்பை முடிப்போா் அனைவரும் உயா்கல்வியைத் தொடரும் வகையிலும் கல்விக் கொள்கை அமைய வேண்டும். ஓராண்டு காலத்தில் கல்விக் கொள்கையை வடிமைத்து அதை அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் துணைக் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com